பழனிசாமிக்கு அனுமதி மறுப்பு?
சசிகலா விவகாரம் தொடர்பாக, முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதை, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் தவிர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பசும்பொன்னில் நாளை முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, இன்று மதுரை செல்கிறார் சசிகலா. கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின், மருதுபாண்டியர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அதை தொடர்ந்து பசும்பொன் சென்று, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
சிவகங்கை, புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூர் செல்கிறார். ஒவ்வொரு ஆண்டும் காலை 7:00 மணிக்கு கோரிப்பாளையம் தேவர் சிலைக்கும், 11:00 மணிக்கு பசும்பொன் தேவர் நினைவிடத்திலும் அ.தி.மு.க., சார்பில் மரியாதை செலுத்துவது வழக்கம். 'சூரியனை பார்த்து குரைக்கிறது' என, சசிகலாவை பழனிசாமி விமர்சித்த விவகாரம், தென் மாவட்ட முக்குலத்தோர் சமுதாயத்தினரிடம் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
எனவே, பசும்பொன் நினைவிடத்திற்கு பழனிசாமி வந்தால், அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தக்கூடும்; சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என, உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பழனிசாமி வருகைக்கு, போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
முதல்வர் தயவால் பெரிதாகிறது அறை!
சட்டசபை வளாகத்தில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் அமர, அ.தி.மு.க., ஆட்சியில் சிறிய அறை ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, 18 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், அந்த அறை போதுமானதாக இல்லை; அறையை பெரிதாக்கி தர வேண்டும்; அலுவலக உதவியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என, முதல்வரை சந்தித்து, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை வைத்தனர். செய்து தருவதாக உறுதி அளித்த முதல்வர், சட்டசபை செயலருக்கு உத்தரவிட்டார்.
![]()
|
இளைஞர் காங்., தேர்தலில் இல்லாத விதிமுறை!
தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகத்தை கலைத்து, தேர்தல் வாயிலாக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, மனு தாக்கல் செய்யும் பணி துவங்கியுள்ளது.
மாநில தலைவர் பதவிக்கு தேவயானி ஹரிஹரன், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர் கணவரை இழந்தவர். தற்போது, தமிழக காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்து பணியாற்றி வருகிறார். தேவயானியின் கணவர் ஹரிஹரன், இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எதிர்பாராத விதமாக ஹரிஹரன் மரணம் அடைந்ததால், தேவயானி தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். இவர் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காக, ஒரு கோஷ்டி புதுக் குழப்பத்தை உருவாக்கி உள்ளது.
அதாவது, 'மாநில தலைவர் தேர்தலில் மனு தாக்கல் செய்தவர்கள், ஏற்கனவே மாவட்ட, சட்டசபை தொகுதி நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும்' என, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற விதிமுறை, இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நிபந்தனைகளில் இல்லை. எனவே, தேவயானி போட்டியிட, இளைஞர் காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு அளிக்குமா அல்லது மறுக்குமா என்ற குழப்பம் நீடிக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE