சென்னை : புதிய கல்வி கொள்கை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க பல்கலை துணைவேந்தர்களுக்கான ஆலோசனை கூட்டம் நாளை(அக்.,30) கவர்னர் மாளிகையில் நடக்கிறது. இதில் அனைத்து பல்கலை துணைவேந்தர்களும் பங்கேற்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழக கவர்னராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி படிப்படியாக தன் நிர்வாக பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். பதவியேற்ற பின் முதல் கட்டமாக டில்லி சென்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை தனித்தனியே சந்தித்து பேசினார்.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகளின் துணைவேந்தர்களுடன் நாளை காலை 10:30 மணிக்கு கவர்னர் மாளிகையில் ஆலோசனை நடத்துகிறார்.சென்னை பல்கலை அண்ணா பெரியார் பாரதியார் பாரதிதாசன் பல்கலைகள் எம்.ஜி.ஆர். அரசு மருத்துவ பல்கலை மீன்வளம் வேளாண்மை பல்கலைகள் சட்ட பல்கலை என அனைத்து வித தமிழக பல்கலைகளின் துணைவேந்தர்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர்களுடன் உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன் மற்றும் பிற பல்கலைகளின் துறை செயலர்களும் பங்கேற்க உள்ளனர்.மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது மத்திய கல்வி துறை யு.ஜி.சி. போன்றவற்றின் உத்தரவுகளை பின்பற்றுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக உயர்கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE