வாஷிங்டன் : அமெரிக்க பார்லிமென்டில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,க்களுடன் அமெரிக்க எம்.பி.,க்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
அமெரிக்காவில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக உடையோர், தீபாவளி பண்டிகையை ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க பார்லிமென்டிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும்.அந்த வகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,க்களுடன், அமெரிக்க எம்.பி.,க்களும் பங்கேற்றனர்.
'இன்டியாஸ்போரா' அமைப்பு, அமெரிக்க இந்தியர் அமைப்புகளுடன் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ''ஹிந்து அமெரிக்க கலாசாரம், அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை மேலும் சிறப்பானதாக மாற்றியுள்ளது,'' என, பார்லி., உறுப்பினரான ரோ கன்னா குறிப்பிட்டார்.
இன்டியாஸ்போரா அமைப்பின் நிறுவனர் எம்.ஆர். ரங்கசாமி, இந்தியாவை பூர்வீக மாக உடைய எம்.பி.,க்களான டாக்டர் அமி பேரா, பிரமிளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் உயர் பதவியில் உள்ள இந்தியாவை பூர்வீகமாக உடைய நீரா டான்டன், விவேக் மூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அமெரிக்க பெண் எம்.பி.,யான கரோலின் மலோனியும் பங்கேற்றார். இவருடைய முயற்சியால் 2016ல் தீபாவளி குறித்த சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. ''தீபங்களின் பண்டிகையான தீபாவளியை மேலும் சிறப்பிக்கும் வகையில், பொது விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என அவர் குறிப்பிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE