தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை: தமிழகத்தில் பிற மாநிலத்தவர்கள் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் வகையில், உள் அனுமதிச்சீட்டு நடைமுறையைக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
நாட்டின் வளர்ச்சிக்காக சிறு துரும்பை கூட எடுத்து போட்டிருக்க மாட்டீர்கள்... தேச ஒற்றுமைக்காக அரும்பாடு பட்ட நம் தலைவர்களை கேவலப்படுத்தும் விதமாக, உள் அனுமதிச்சீட்டு வேண்டும் என்கிறீர்கள்... உங்களையும் சிலர் நம்பி, எம்.எல்.ஏ., ஆக்கியுள்ளனரே!
ஐந்து மாவட்ட விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் பேச்சு: முல்லை பெரியாறு அணை பலமாக இருக்கிறது. அதற்கு எந்த ஆபத்தும் இல்லை என உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகும், கேரளாவில், அந்த அணைக்கு எதிராக தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதை நிறுத்திக் கொள்ளாவிடில், 2011ல் செய்தது போன்ற வணிக முற்றுகை தொடரப்படும்; எந்த பொருட்களும் கேரளாவுக்கு அனுப்பப்படாது.
அம்மாநில மார்க்சிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன் கூட, 'அணை பலமாக இருக்கிறது; வீண் வதந்தி பரப்பாதீர்' என்கிறார். கேட்க மாட்டேன் என்கின்றனரே!
அ.தி.மு.க., வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி: சசிகலாவை அ.தி.மு.க.,வில் இணைப்பது குறித்து கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் ஆலோசனை செய்து முடிவெடுப்பர் என்று தானே, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறினார்... அதில் என்ன தவறு இருக்கிறது. கட்சி தலைமைக்கு கட்டுப்படுவதில், அவருக்கு நிகர் யாருமில்லை.
எப்படியோ, அ.தி.மு.க., என்ற தேரை இழுத்து தெருவில் விட வேண்டும் என்ற அந்த நபரின் மறைமுக செயல்திட்டத்திற்கு, நீங்கள் எல்லாரும் ஆடத் துவங்கி விட்டீர்கள்!
பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி: ஒட்டுமொத்த பா.ஜ.,வும், மாநில தலைவர் அண்ணாமலைக்கு பின்னால் உள்ளது; நீதிமன்றத்தை எப்படி சந்திக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அ.தி.மு.க., உட்கட்சி விவகாரங்களில் பா.ஜ., தலையிடாது; அ.தி.மு.க., எங்களது மதிப்பு மிக்க கூட்டணி கட்சி.

அ.தி.மு.க.,வினர், தமிழக பா.ஜ.,வை எந்த அளவுக்கு மதிக்கின்றனரோ தெரியவில்லை. ஆனால், தமிழக பா.ஜ., - அ.தி.மு.க.,வை அளவுக்கு அதிகமாகவே மதிக்கிறது!
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: நாயன்மார்களும் ஆழ்வார்களும் தமிழில் தான் பாசுரங்களை பாடினர். வட மாநிலங்களில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் உண்டா; பாசுரங்கள் உண்டா? அதனால் தான் ஹிந்து மதத்தை கைவிட்டு சைவம், வைணவத்துக்கு திரும்பி வாருங்கள் என்றேன். கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களை தாய் மதம் திரும்ப சொல்லவில்லை.
கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் இடித்ததும், 'நான் அப்படி சொல்லவில்லை' என்கிறீர்கள். ஹிந்துக்கள் அதை பார்த்து கைதட்டிக் கொண்டிருக்கின்றனர். ஹிந்துக்களுக்கு ஹிந்து உணர்வு இல்லாததால் தான், உங்களைப் போன்றவர்கள் முன் அப்பாவியாக நின்று கொண்டிருக்கின்றனர்.
கவிஞர் வைரமுத்து அறிக்கை: தமிழகத்தில் கமல் ஹாசன், பாரதிராஜா, இளையராஜா என்று, 'தாதா சாகேப் பால்கே' விருதுக்கு தகுதி மிக்க பெருங்கலைஞர்கள் உள்ளனர். அதை மத்திய அரசின் கண்களுக்கு காட்டுவோம்.
நடிகர் ரஜினிக்கு இந்த விருது கிடைத்ததும், உங்களின் விருப்ப பட்டியலை தெரிவித்து விட்டீர்கள். எனினும், ரஜினி என்ற மாயசக்திக்குத் தான் அந்த விருது பொருத்தம் என, மத்திய அரசு நினைக்கிறதே!
விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் அறிக்கை: 'பெகாசஸ்' உளவுச்செயலி விவகாரத்தை விசாரிப்பதற்கு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் விசாரணை குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளதை வரவேற்கிறேன். நீதி கிடைக்கும் என்ற சிறு நம்பிக்கை துளிர்த்திருக்கிறது.
விடாப்பிடியாக இருந்து வெற்றி பெற்றுள்ளீர்கள்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE