வாஷிங்டன்: அமெரிக்காவின் ஆளும் ஜனநயாகக் கட்சியின் செனட்டர், கோடீஸ்வரர்களின் சொத்துக்களுக்கு 20 சதவீத மூலதன ஆதாய வரி மற்றும் நிகர முதலீட்டு வருமானத்தில் 3.8% வருமான வரி விதிக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இத்தகவல் வெளியான நிலையில் இந்த வரி விதிப்பு முட்டாள்தனமானது, பைத்தியக்காரத்தனமானது என கோடீஸ்வரர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் அரசின் வருவாயை அதிகரிக்க கோடீஸ்வரர்களின் சொத்துக்களுக்கும் வரி விதிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரி வருகின்றனர். தற்போது அக்கட்சி வெற்றி பெற்று பைடன் அதிபராக உள்ளார். இதனால் கோடீஸ்வரர்களின் சொத்துக்களுக்கு வரி விதிக்கும் மசோதாவை கொண்டு வர முயல்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க செனட்டின் நிதிக் குழு தலைவரும், ஜனநாயகக் கட்சியின் செனட்டருமான ரான் வைடன் 700 பில்லியனர்களிடம் வரி விதித்து, அதன் மூலம் அதிபரின் பொருளாதார கொள்கைகளுக்கு உதவும் திட்டத்தை முன் மொழிந்துள்ளார். அவர் வெளியிட்ட திட்டத்தில், 100 கோடி டாலர் மற்றும் அதற்கு மேற்பட்ட சொத்து வைத்திருப்பவர்கள், அல்லது தொடர்ந்து மூன்று வருடங்கள் 10 கோடி டாலர் அல்லது அதற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களிடம் 20 சதவீத மூலதன ஆதாய வரி வசூலிக்க வேண்டும். நிகர முதலீட்டு வருமானத்தில் 3.8% வரி விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த வரி விதிப்பின் கீழ் சுமார் 800-க்கும் குறைவானவர்கள் வருவார்கள். தங்களது பங்குகளை வர்த்தகம் செய்யாவிட்டாலும் வரி விதிக்கப்படும் என புதிய திட்டத்தில் கூறியுள்ளார். இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 20,000 கோடி டாலர்கள் திரட்ட முடியும் என இத்திட்டத்தின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்த நிதியை காலநிலை மாற்றத்துக்கு எதிரான பணிகளுக்கும், உலகளாவிய அளவில் மழலையர் பள்ளி கல்வி வழங்குதல், சுகாதாரத் திட்டங்களை விரிவுப்படுத்துதல் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்திற்கு எதிராக குடியரசுக் கட்சியினர் ஒன்றுபட்டுள்ளனர். சிலர் இத்திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதாக கூறியுள்ளனர்.
உலக பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவரும், டெல்ஸா நிறுவனருமான எலான் மஸ்க் மற்றும் பலர் இத்திட்ட முன்மொழிவை எதிர்த்துள்ளனர்.
ரியல் எஸ்டேட் மற்றும் பல்பொருள் தொடர் அங்காடியில் கோலோச்சும் கோடீஸ்வரர் ஜான் காட்ஸிமாடிடிஸ், “இந்த வரி விதிப்பு கொஞ்சம் பைத்தியக்காரத்தனமானது. அவர்கள் பணத்தை முட்டாள்தனமான பட்ஜெட்களுக்கு செலவிடுகிறார்கள். அதற்காக எல்லாரையும் தொந்தரவுக்குள்ளாக்குகிறார்கள். பணத்தை முட்டாள்தனமாக செலவழிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள்” என கூறுகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE