புதுடில்லி : கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் அதிக நன்கொடை வசூலித்த மாநில கட்சிகளின் பட்டியலில் சிவசேனா, அ.தி.மு.க., ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை முதல் ஐந்து இடத்தில் உள்ளன.
நாடு முழுதும் உள்ள மாநில கட்சிகள் கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் வசூலித்த நன்கொடை விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன.
இதன் அடிப்படையில் ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது; அதன் விபரம்:ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 53 அரசியல் கட்சிகளில், இரண்டு கட்சிகள் மட்டுமே சரியான நேரத்தில் தங்கள் நன்கொடை விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன.
இதர 28 கட்சிகள், ஆறு நாட்களில் இருந்து 320 நாட்கள் தாமதமாக அறிக்கை அளித்துள்ளன. 23 கட்சிகள் இதுவரை அறிக்கை அளிக்கவில்லை.அதிக நன்கொடை வசூல் செய்த கட்சிகளில் சிவசேனா, அ.தி.மு.க., ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முதல் ஐந்து இடங்களை வகிக்கின்றன.
சிவசேனா 63 கோடி ரூபாயும், அ.தி.மு.க., 52 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளன. மேலும் 16 மாநில கட்சிகள் 1,026 நபர்களிடம் இருந்து, 'பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை விபரம் இன்றி, 25 கோடி ரூபாய் நன்கொடை வசூல் செய்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE