லக்னோ:''உத்தர பிரதேச முதல்வராக 2022ல் யோகி ஆதித்யநாத்தும், நாட்டின் பிரதமராக 2024ல் நரேந்திர மோடியும் மீண்டும் பதவி ஏற்பர்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில், பா.ஜ., சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்நிறுத்தப்பட போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில், உ.பி.,யின் லக்னோவில் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கும் நிகழ்ச்சிக்கு பா.ஜ.,ஏற்பாடு செய்திருந்தது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
அப்போது, 'என் குடும்பம்; பா.ஜ., குடும்பம்' என்ற புதிய கோஷத்தை அவர் அறிமுகம் செய்தார். நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:தீபாவளி பண்டிகைக்கு பின், சட்டசபை தேர்தல் பணிகள் முழு வீச்சில் துவங்கும். தொண்டர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். உ.பி.,யில் 300 இடங்களுக்கு மேல் நாம் வெற்றி பெற வேண்டும்.முகலாயர்கள் ஆட்சி காலத்தில் இருந்து, பா.ஜ., முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வரை, பாபா விஸ்வநாத், ராமர், கிருஷ்ணரின் புண்ணிய பூமியாக உ.பி., தோற்றம் அளிக்கவில்லை.
பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், இந்த மாநிலத்திற்கு நீண்ட நாட்களாக கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அதை மேலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்து சென்றுள்ளது. சொந்த குடும்பங்களின் வளத்திற்காக அல்லாமல், ஏழை மக்களின் நலனுக்காகவே அரசுகள் அமைக்கப்படுகின்றன என்பதை பா.ஜ., நிரூபித்து உள்ளது.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனை நாட்கள் வெளிநாடுகளில் தங்கி இருந்தார் என, மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். இவர்கள் தங்கள் குடும்பத்துக்காகவும், தங்கள் சொந்த ஜாதியினருக்காகவும் மட்டுமே ஆட்சி நடத்தினர்.உ.பி., மக்களின் தேவைகள் அனைத்தையும் பா.ஜ., அரசு பூர்த்தி செய்து வருகிறது.
எனவே, 2022 தேர்தலில் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டும்.இது, 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் வெற்றிக்கும், மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கவும் அடிக்கல்லாக அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE