புதுடில்லி ;இந்தியாவுடனான எல்லையில் சீன ராணுவம் அத்துமீறுவதை தடுக்க, அமெரிக்காவிடமிருந்து வாங்கிய, 'சினுக்' ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை நிலைநிறுத்தி இந்தியா அசத்தியுள்ளது.
இந்தியா - சீனா இடையேயான எல்லைகள் லடாக்கிலும், வடகிழக்கு மாநிலமான அருணாச்சலிலும் அமைந்துள்ளன. லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறுவதும், அவர்களை இந்திய ராணுவம் விரட்டியடிப்பதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகவே உள்ளது.
நீடிப்பு
கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு ஜூனில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், லடாக் எல்லையில் ௧௫ மாதங்களுக்கு மேலாக பதற்றம் நீடித்து வருகிறது.
இந்தியா - சீனா இடையே, ராணுவ கமாண்டர்கள் அளவில் பல சுற்று பேச்சு நடத்தியும் பதற்றம் பெரிதும் குறையவில்லை. வடகிழக்கு மாநிலமான அருணாச்சலில் திபெத் - பூடான் எல்லையை ஒட்டி தவாங் பீடபூமி உள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதனால் அருணாச்சலுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட யார் சென்றாலும் அதை கண்டித்து புலம்புவது சீனாவுக்கு வழக்கமாக உள்ளது.
இந்த எல்லைப்பகுதி, வரலாறு, அரசியல், ராணுவ முக்கியத்துவம் பெற்றது. கடந்த ௧௯௫௯ல், சீன ராணுவ நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா, தவாங் பீடபூமி வழியாகவே இந்தியாவுக்குள் நுழைந்தார்.
இதன்பின் மூன்று ஆண்டுகள் கழித்து, இந்த நிலப்பகுதிக்கு உரிமை கொண்டாடி, இந்தியாவுடன் சீனா போரிட்டது. தவாங் பீடபூமியை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது சீனாவின் பேராசை.அதனால், தவாங் பகுதியில் சீனா அவ்வப்போது அத்துமீறுவதை வழக்கமாக வைத்துள்ளது.கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஆண்டு சீன ராணுவம் அத்துமீறியது போல், தவாங் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறலாம் என்பதால், அங்கு கண்காணிப்பு பணிகளை இந்தியா அதிகரித்துள்ளது.சீனாவின் அத்துமீறல், இந்தியா - அமெரிக்கா இடையேயான ராணுவ உறவை வலுப்படுத்திஉள்ளது. இதையடுத்து, அமெரிக்காவிடமிருந்து கடந்த ஆண்டுகளில் வாங்கிய சினுக் ரக ஹெலிகாப்டர் மற்றும் துப்பாக்கிகளை, தவாங் பகுதியில் இந்தியா நிலைநிறுத்தியுள்ளது.
மிரட்டல்
மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'சூப்பர்சானிக்' கப்பல் ஏவுகணைகளையும் இந்தியா நிறுத்தியுள்ளது. தவாங் எல்லையில் ராணுவத்தின் தயார் நிலை மற்றும் தாக்குதல் திறன்களை தெரிவிக்கும் நோக்கில், பத்திரிகையாளர்கள் அடங்கிய குழுவை ராணுவம் சமீபத்தில் அழைத்து சென்றது. அப்போது, கிழக்கு ராணுவ கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே கூறியதாவது: தவாங் எல்லையில் பீரங்கிகள், ஏவுகணைகள், துப்பாக்கிகள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இவை ஒருங்கிணைந்து செயல்பட்டு, எல்லை பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன.சீனாவின் எந்த வித மிரட்டல்களையும், அத்துமீறல்களையும் நம் ராணுவத்தால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.
உலகில் ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பாவை விட இந்தியா தான் சிறப்பான மலைப் பிரதேச ராணுவ படையை வைத்துள்ளது. மொத்தம் 12 படைப் பிரிவுகளில் 2 லட்சம் வீரர்கள் இதில் உள்ளனர். லடாக் எல்லையை விட வடகிழக்கு எல்லையில் ராணுவத்தின் பலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ௧௯௬௨ல் சீனா அத்துமீறி நடத்திய தாக்குதல் போல் மற்றொரு தாக்குதலை நடத்த அனுமதிக்கக் கூடாது என்பதில் ராணுவம் உறுதியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
சீனாவை நம்ப முடியாது
தவாங் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து, இந்திய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சீனாவை நம்ப முடியாது. லடாக் எல்லையில் பதற்றத்தை குறைக்க, பல சுற்றுக்கு மேல், பேச்சு நடத்தப்பட்டுள்ளது.பேச்சின் போது படைகளை வாபஸ் பெற ஒப்புக் கொள்ளும் சீனா, அதை செயல்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறது. லடாக்கில் சீனா மீண்டும் அத்துமீறாது என யாராலும் சொல்ல முடியாது. அதே நிலை தான் தவாங் எல்லையிலும் உள்ளது. அதனால், லடாக் மற்றும் தவாங் எல்லையில் அலட்சியம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த சவாலையும் சந்திக்க, நம் ராணுவம் தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE