தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு : | Dinamalar

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி 'ரெய்டு' :

Updated : அக் 30, 2021 | Added : அக் 30, 2021 | கருத்துகள் (14)
தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று பல்வேறு துறை அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத லட்சக்கணக்கான ரொக்கப்பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர்.பல்வேறு மாவட்டங்களில் அரசு அலுவலங்களில் நடந்த சோதனை விவரம்:வணிகவரித்துறை திருவண்ணாமலை, வணிகவரித்துறை அலுவலகத்தில் பரிசு பொருட்கள், பட்டாசு, பணம் வசூல் நடப்பதாக
 தமிழகம் , அரசு அலுவலகங்கள், லஞ்ச ஒழிப்பு ,அதிரடி  'ரெய்டு' :

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று பல்வேறு துறை அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத லட்சக்கணக்கான ரொக்கப்பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பல்வேறு மாவட்டங்களில் அரசு அலுவலங்களில் நடந்த சோதனை விவரம்:


வணிகவரித்துறைதிருவண்ணாமலை, வணிகவரித்துறை அலுவலகத்தில் பரிசு பொருட்கள், பட்டாசு, பணம் வசூல் நடப்பதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து நேற்று மாலை, 4:00 மணிக்கு லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., மதியழகன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்த தொடங்கினர். அப்போது, அங்கிருந்த பட்டாசு பெட்டிகள், பரிசு பொருட்கள் மற்றும் கணக்கில் வராத, 20 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தீபாவளி பணம் வசூலிக்க திட்டமிட்டனரா என்பது குறித்து, அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஆர்.டி.ஓ., ஆபீஸ்:
நீலகிரி மாவட்டம், ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில், மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கனிடம் இருந்து கணக்கில் வராத, 1.38 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். ஆவணங்களை எடுத்து சென்றனர். இரவு வரை விசாரணை தொடர்ந்தது.


தஞ்சை;இதேபோல, தஞ்சாவூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று மதியம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அலுவலகத்தில் உள்ளே மூன்று இடங்களிலும், இரண்டு புரோக்கர்களிடம் என, கணக்கில் வாரத 30 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


திருச்சி:திருச்சி பிராட்டியூரில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களிலும் சோதனை நடந்தது. சில இடங்களில் ஒன்றிய அலுவலகங்களிலும் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.ஓசூர் :ஓசூர் போக்குவரத்து சோதனைச்சாவடியில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில், 84 ஆயிரத்து, 160 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓசூரில் இருந்து, பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிப்காட் ஜங்ஷன் அருகே, போக்குவரத்துத்துறை சோதனைச்சாவடி (வெளிவழி) அமைந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பரிசு பொருட்கள் வாங்குவதாகவும், நான்கு சக்கர மற்றும் கனரக வாகன ஓட்டிகளிடம், தற்காலிக அனுமதி சீட்டு வழங்கும் போது, கூடுதல் பணம் வசூல் செய்வதாகவும், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை, 4:15 முதல், இரவு, 8:00 மணிக்கு மேலாகியும், டி.எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத, 84 ஆயிரத்து, 160 ரூபாய் இருப்பது தெரிந்தது. மோட்டார் வாகன ஆய்வாளர் லியோ அந்தோணியிடம் விசாரணை நடத்தப்பட்டது.நகராட்சி:சென்னை பல்லாவரம் நகராட்சியில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று, அதிரடி சோதனை நடத்தினர். குரோம்பேட்டை, நியு காலனியில், பல்லாவரம் நகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, தீபாவளி பண்டிகைக்கு முன், இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு, கணக்கில் வராத இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


latest tamil news
கரூர் வட்ட வழங்கல் அலுவலகம்கரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், வட்ட வழங்கல் அலுவலகம் செயல்படுகிறது. புதிய ரேஷன் கார்டு வினியோகம், தொலைந்து போன ரேஷன் கார்டுக்கு மாற்று கார்டு தருவது உள்ளிட்ட, பணிகளுக்கு பணம் வசூல் செய்வதாக ஏற்கனவே புகார் உள்ளது.


இந்நிலையில் நேற்று மாலை, 3:00 மணிக்கு கரூர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நடராஜன் தலைமையிலான போலீசார் வட்ட வழங்கல் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது, தொலைந்து போன கார்டுக்கு பதிலாக, புதிய ரேஷன் கார்டு பெற பொதுமக்கள் அரசுக்கு செலுத்திய தொகை, 2,920 ரூபாய் அலுவலகத்தில் இருக்க வேண்டும். ஆனால், அலுவலகத்தில், 190 ரூபாய் மட்டும் இருந்தது. பற்றாக்குறையாக இருந்த, 2,730 ரூபாய் குறித்து, வட்ட வழங்கல் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து விட்டு சென்றனர்.

.


செங்கல்பட்டுஅடுத்த பரனுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., லட்சுமிகாந்தன் தலைமையிலான போலீசார் 10 பேர், இரவு 9:00 மணி கடந்தும் சோதனை நடக்கிறது.
அதேபோல் திருவள்ளூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கலைச்செல்வன் தலைமையில் போலீசார் ஆய்வு செய்து கணக்கில் வராத, 53 ஆயிரத்து 130 ரூபாயை பறிமுதல் செய்தனர். முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக, லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்தனர்.

சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் அமைந்துள்ள போக்குவரத்து அலுவலகத்திலும், லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இதே போல், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களில் நேற்று, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இதில், பல முக்கிய ஆவணங்கள், பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


விருதுநகர் இன்ஸ்பெக்டர் வீட்டில் 1.50லட்சம், 6 பண்டல் பட்டாசு பறிமுதல்-விருதுநகர் அருகே வச்சகாரபட்டி இன்ஸ்பெக்டர் கருப்பசாமி 50, வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில், ரூ.1.50 லட்சம், 6 பண்டல் பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வச்சகாரபட்டி இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தங்கி உள்ள காந்திநகர் வாடகை வீட்டில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், பாரதி பிரியா அடங்கிய போலீஸ் குழுவினர் சோதனை நடத்தினர். மதியம் 2:00 மணிக்கு தொடங்கிய இச்சோதனை இரவு 8:00 மணிக்கு பின்பும் நடந்தது. இதில் வீட்டிலிருந்த ரூ.1 .53 லட்சம், 6 பண்டல் பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டது.


சார் பதிவாளரிடம் ரூ.1.12 லட்சம் பறிமுதல்திருப்பூரில் பத்திரப்பதிவு சார்பதிவாளரிடம் இருந்த, கணக்கில் வராத, 1.12 லட்சம் ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தீபாவளியை முன்னிட்டு, அரசு அலுவலகங்களில், அன்பளிப்பு பணம் பரிவர்த்தனை நடப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள, பத்திரப்பதிவுத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அலுவலகங்களை, லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூர், நெருப்பெரிச்சலில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில், நேற்று மாலை, லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். தொட்டிபாளையம் சார் பதிவாளர் வெங்கடேஸ்வரன், காரில் ஏறி புறப்பட்டு சென்ற போது, அவரை தடுத்து விசாரணை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர், இரண்டு மணி நேரம் சோதனை நடத்தினர். சார்பதிவாளர் வெங்கடேஸ்வரனின், சட்டை மற்றும் பேன்ட் பாக்கெட்டுகள், 'டிபன்' பாக்ஸ்சில் வைத்திருந்த, ஐந்து கவர்களில் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில்,'திடீர் ஆய்வின் போது, 1.12 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளோம். சார்பதிவாளர் வெங்கடேஸ்வரனுக்கு, பத்திர எழுத்தர்கள் பணத்தை வழங்கியுள்ளனர். பத்திர எழுத்தர் யார் என்று விசாரணை தொடர்கிறது' என்றனர்.


'டாஸ்மாக்' கடையில் 'ரெய்டு' 7,000 மது பாட்டில் பறிமுதல்விழுப்புரம் அருகே, 'டாஸ்மாக்' கடையில் கணக்கில் வராத 31 ஆயிரம் ரூபாய் மற்றும் குடோனில் பதுக்கி வைத்திருந்த 7,000 மது பாட்டில்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் அடுத்த ஜானகிபுரத்தில் உள்ள இரு டாஸ்மாக் கடைகளில், கூடுதலாக மது பாட்டில்கள் வாங்கி தனியார் குடோனில் பதுக்கி வைத்துள்ளனர் என, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜானகிபுரம் டாஸ்மாக் கடையில் நேற்று மாலை 4:00 மணிக்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், அரசு குடோனில் இருந்து கடைக்கு அனுப்பிய மது பாட்டில்கள் விபரம், இருப்பில் உள்ள மது பாட்டில்கள் விபரம் மற்றும் விற்பனை தொகை ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

இதில், கணக்கில் வராத 31 ஆயிரத்து 680 ரூபாய் மற்றும் குடோனில் பதுக்கி வைத்திருந்த, கணக்கில் காட்டாத 6 லட்சத்து 47 ஆயிரத்து 180 ரூபாய் மதிப்பிலான 7,000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X