துப்பாக்கியுடன் வலம் வந்த விவேக்!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

சசிகலா காரில் செல்லும் போதும், ஓட்டலில் தங்கிய போதும், அவருக்கு பாதுகாப்பாக இளவரசி மகன் விவேக் உடன் சென்றார். அப்போது அவர், 'லைசென்ஸ்' பெற்ற கைத்துப்பாக்கியுடன் வலம் வந்துள்ளார். சசிகலாவை சந்தித்து, அவரிடம் நலம் விசாரிக்க வந்த அ.ம.மு.க., நிர்வாகிகளின் கண்ணில் தெரியும்படி, துப்பாக்கியை 'பேன்ட்' பின் பாக்கெட்டில் விவேக் வைத்திருந்தார். இதனால், சசிகலாவை சந்தித்து வணக்கம் சொல்லவே அச்சப்பட்டு, நிர்வாகிகள் ஒதுங்கிச் சென்றனர்.
அதேபோல், சசிகலா தம்பி திவாகரனிடம் நெருக்கமாக இருந்த தேவா போன்றவர்களும் சசிகலாவை சுற்றி வருகின்றனர். ஏற்கனவே, சசிகலா குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கம், அதிகாரம், படாடோபம் போன்ற காரணங்களால் தான், அவர்களை தொண்டர்கள் வெறுத்தனர். சசிகலா நேரடி பார்வையின் கீழ் கட்சி பணி செய்ய, அ.ம.மு.க., நிர்வாகிகள் விரும்புகின்றனர். ஆனால், சசிகலாவை சுற்றி மீண்டும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது, அ.ம.மு.க., நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தலை தீபாவளி வசூல் வேட்டை
காவல் துறையில், 'தமிழ்நாடு சிறப்பு காவல் படை' என்ற பிரிவு செயல்படுகிறது. இதில் பணிபுரியும் போலீசாரில் தலை தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்; நவ., 3-7 வரை, ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். தீபாவளி அன்பளிப்பாக, தளவாய் எனப்படும் அதிகாரிகள், 200 ரூபாய் பட்டாசு; 100 ரூபாய் மதிப்புள்ள இனிப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதெல்லாம் நல்ல விஷயம் தான். ஆனால், போலீசாரின் தலை தீபாவளி அன்பளிப்பை காரணமாக கூறி, பட்டாசு கடைகள், ஸ்வீட் கடைகளில் வசூல் வேட்டை எல்லை மீறி செல்வதாக, காவல் துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. எல்லை மீறல் தவிர்க்கப்படுமா?
'கை' நனைக்காமல் சென்ற உறவுகள்
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் மகள் திருமண வரவேற்பு விழா விருந்தில், 75 ஆயிரம் பேர் சாப்பிட்டுள்ளனர். சசிகலா பாதுகாப்பு பணிக்கு மட்டும், 100 தனியார் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மணமகனின் தந்தை கிருஷ்ணசாமி வாண்டையாரை யார் என தெரியாமல், அந்த காவலர்கள், மணமக்கள் அறைக்கு அனுமதிக்கவில்லை.
சென்னையில் இருந்து சென்ற சசிகலாவின் தீவிர ஆதரவாளர் ஒருவர், அந்த காவலர்கள் முதுகில் ஓங்கி அடித்து, கிருஷ்ணசாமி வாண்டையாரை உள்ளே அனுமதிக்க வைத்தார். வாகனங்கள் நிறுத்தம் ஏற்பாடு சரியாக திட்டமிடாததால், கூட்டத்தினரை சமாளிக்க முடியவில்லை. டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தினர், குடும்பம் குடும்பமாக விருந்து உண்டனர். கூட்ட நெரிசலால், சசிகலாவின் கணவர் நடராஜனின் தம்பி ராமச்சந்திரனும், அவரது குடும்ப உறுப்பினர்களும் விருந்தில் கை நனைக்காத நிலை ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE