மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், சாப்பாடு வழங்காமல் அப்புறப்படுத்தினர் என புகார் கூறிய நரிக்குறவர் இன பெண்ணின் அருகில் அமர்ந்து, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று, அன்னதானம் சாப்பிட்டார்.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், அரசின் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பக்தர்களுக்கு வழங்கும் அன்னதானத்தில், கோவில் ஊழியர் ஒருவர், நரிக்குறவ பெண்ணான அஸ்வினி என்பவருக்கு உணவு வழங்காமல் அவரை வெளியேற்றியதாக, அண்மையில் தகராறு ஏற்பட்டது. அந்த பெண் தனியார் 'யு டியூப்' சேனலில் அளித்த பேட்டி, சமூக வலைதளங்களில் பரவியது.இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று, திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோருடன், ஸ்தலயனர் கோவிலுக்கு சென்று, சுவாமியை தரிசித்தார்.தொடர்ந்து, சிறப்பு சமபந்தி விருந்தாக பரிமாறப்பட்ட சாதம், வடை, பாயசம், கூட்டு என, நரிக்குறவர்களுடன் சேர்ந்து அமர்ந்து உணவு உண்டார்;
அவர்களுக்கு புத்தாடை வழங்கினார்.நிருபர்களிடம் சேகர்பாபு கூறியதாவது:இக்கோவில் அன்னதானத்தில் உணவு வழங்காமல் அலட்சியப்படுத்தியதாக, ஒரு பெண் கூறியிருந்ததை, முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அதே பெண்ணை அழைத்து என் அருகில் அமரவைத்து, சமபந்தி சாப்பிட்டேன்.சென்னையில், அங்காள பரமேஸ்வரி உள்ளிட்ட மூன்று கோவில்களை ஆய்வு செய்து, நான்காவதாக, இங்கு வந்தேன்.இந்த கோவில் திருப்பணிக்கு முதற்கட்டமாக, 68 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு தனி செயல் அலுவலரை நியமிப்போம்.கும்பாபிஷேகம் நடத்தப்படாத கோவில்களுக்கு நடத்தப்படும். வருமானம் இல்லாத உபகோவில்களின் நித்திய வழிபாட்டிற்காக, வருமானம் உள்ள பெரிய கோவில்களுடன் அவற்றை இணைக்கவும் ஏற்பாடு செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE