ரோம்-அடுத்தாண்டு இறுதிக்குள் 500 கோடி 'டோஸ்' கொரோனா தடுப்பூசி தயாரித்து உலக நாடுகளுக்கு உதவத் தயாராக உள்ளதாக, ஜி - 20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகரில், ஜி - 20 மாநாடு நடக்கிறது. இதில், பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:கொரோனாவை தடுப்பதற்கு உலக நாடுகளுக்கு இந்தியா பெரிய அளவில் உதவி செய்து வருகிறது. வைரஸ் பரவலின்போது, 150 நாடுகளுக்கு மருந்துகள் உள்ளிட்டவை வினியோகிக்கப்பட்டன.அதைத் தொடர்ந்து உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 'கோவாக்சின்' தடுப்பூசியும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் வழங்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு சர்வதேச அனுமதி கோரி, உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளோம். அதற்கு அனுமதி கிடைத்ததும், மற்ற நாடுகளுக்கும் வினியோகிக்க தயாராக உள்ளோம்.அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 கோடி, 'டோஸ்' தடுப்பூசி இந்தி யாவில் தயாரிக்கப்படும்; இதை உலக நாடுகளுக்கும் வினியோகிக்க தயாராக உள்ளோம்.உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நாடுகளுக்கு இடையேயான பயணத்துக்கு உள்ள தடைகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.