திருச்செந்துார் முருகன் கோவிலில் நடக்கும் சூரசம்ஹார விழா, உலக பிரசித்தி பெற்றது. இந்தாண்டு சஷ்டி திருவிழா, நவம்பர், 4ல் துவங்கி 15ல் நிறைவடையும். நவ., 9ல் சூரசம்ஹாரம்; அடுத்த நாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கும். இந்த இரண்டு முக்கிய தினங்களில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கேற்க, மக்களுக்கு அனுமதி இல்லை என்று துாத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ் சங்கத்தின் நிறுவன தலைவர் துாத்துக்குடி ராமகிருஷ்ணன் கூறியதாவது: முருகப் பெருமானை சஷ்டி திருநாளில் விரதமிருந்து வழிபடுவது தான் கந்த சஷ்டி விரதம். திருமணமான பெண்கள், குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக, திருச்செந்துார் முருகனை நினைத்து, ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி திதியில் துவங்கி, ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டி திதி வரை விரதமிருப்பர். திருச்செந்துாரில் சூரசம்ஹாரம் முடிந்த உடன் விரதத்தை முடித்தால், நிச்சயம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த வேண்டுதலை நிறைவேற்ற, ஒவ்வொரு ஆண்டும் இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும், திருச்செந்துாருக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இது, ஒரு மதத்துக்கான நிகழ்ச்சி அல்ல; உணர்வபுப்பூர்வமான நிகழ்ச்சி. அதனால் தான் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் மக்கள் கூடுகின்றனர். இப்படிப்பட்ட நிகழ்ச்சியை கொரோனாவை காரணம் காட்டி, கடந்த ஆண்டை போலவே, பக்தர்களுக்கு தடை போடுவது சரியல்ல.விழா நடக்கும், நவ., 4 முதல் 8 வரையும் மற்றும் 11 முதல் 15 வரையும், தினமும் காலை 5:00 முதல் இரவு 8:00 வரை, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது என்று அரசு கூறுகிறது. இதை ஏற்க முடியாது.
ஹிந்து கோவில் திருவிழாக்களுக்கு மக்கள் கூடி விட்டால், கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று, அரசு கூறுகிறது. ஆனால், தீபாவளியை ஒட்டி, நடிகர் ரஜினியின், 'அண்ணாத்த' படம் ஆயிரத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீசாகிறது. இதற்காவே தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை நிரப்ப அனுமதி அளித்துள்ளனர்.படத்தை பார்க்க ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்வர். அவர்கள் படம் பார்க்க ஒட்டுமொத்தமாக கிளம்பி வந்து, ஒரே இடத்தில் கூடும்போது பரவாத கொரோனா, கோவில் திருவிழாக்களுக்கு, பக்தர்கள் கூடினால் மட்டும் பரவி விடுமாம். இதை மத துவேஷம் என்று சொல்வதில் என்ன தவறு?வேண்டுதலுக்காக இரண்டு, மூன்று ஆண்டுகள் தாடியும், தலை முடியும் வளர்த்து விட்டு, கந்த சஷ்டி விழாவின் போது, திருச்செந்துாருக்கு வந்து முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு கூட, கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. பக்தர்கள் வேதனையோடு, திருச்செந்துாரில் இருக்கும் சலுான்களில் தாடியை மழித்தும், மொட்டை அடித்து செல்லும் காட்சியை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. ஆறு நாட்களுக்கு, கோவிலுக்குள்ளேயே முழுமையான விரதம் இருந்து, ஆறாம் நாளில் சூரசம்ஹாரம் நடந்ததும், விரதத்தை முடிக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள், இந்த ஆண்டும் வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றனர். இது, முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா என தெரியவில்லை. அவர் கவனத்துக்கு கொண்டு சென்றனரா என்பதும் தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
'எச்சரிக்கை உணர்வு'-
யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கோடு, அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. தசரா மற்றும் திருச்செந்துார் சூரசம்ஹார திருவிழா நிகழ்ச்சிகளை பொறுத்தவரை, ஆயிரக்கணக்கில் அல்ல, லட்சக்கணக்கில் மக்கள் கூடுவர். அதை அனுமதித்தால், மிகுந்த சிரத்தை எடுத்து குறைக்கப்பட்ட கொரோனா பரவல், ஒரே நாளில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அந்த எச்சரிக்கை உணர்வோடு தான், கோவில் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மற்றபடி, பக்தர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், அரசோ, மாவட்ட நிர்வாகமோ நடப்பதாக யாரும் எண்ண வேண்டாம். கொரோனா பரவலே இல்லை என்ற நிலையில், அடுத்த ஆண்டு விழாவுக்கு நிச்சயம் எந்த கட்டுப்பாடும் இருக்காது. -- மாவட்ட நிர்வாக உயர் அதிகாரி

'கடவுளுக்கே சோதனை!'
கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்காக, எல்லாவற்றையும் திறந்து விட்டு விட்டு, கோவிலை மட்டும் மூடுவோம்; கோவில் விழாக்களுக்கு பக்தர்களை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வது அயோக்கியத்தனம். திருச்செந்துார் கோவிலை மையமாக வைத்து, 30 ஆயிரம் குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருகின்றன. அரசின் கெடுபிடிகளால், அந்த குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளன. திருச்செந்துார் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார நிகழ்வுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.தி.மு.க., ஆட்சியில் பக்தர்களுக்கு மட்டுமல்ல, கடவுளுக்கே கூட சோதனை வந்திருக்கிறது. என்ன செய்ய?- பி.வி.ஜெயகுமார்மாநில துணை தலைவர்ஹிந்து முன்னணி
- நமது நிருபர் --.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE