சென்னை-நடைமுறை மூலதன செலவுகளை சமாளிக்க, பல்வேறு வங்கிகளிடம் இருந்து, மின் வாரியம் கடன் வாங்க முடிவு செய்துள்ளது.தமிழக மின் வாரியத்திற்கு வருவாயை விட, செலவு அதிகம் இருப்பதால், வருவாய் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதனால் நடைமுறை மூலதன செலவுகள், புதிய மின் திட்டங்கள் போன்றவற்றிற்கு, மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் கடன் வாங்கப்படுகிறது.தற்போது, மின் வாரியத்தின் கடன் 1.59 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதற்காக ஆண்டுதோறும் 16 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி மட்டும் செலுத்தப்படுகிறது. பொது மற்றும் தனியார் வங்கிகளில் இருந்து மட்டும், 15 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது.அதிக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவு நுகர்வோர்களிடம் இருந்து, இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதல் காப்பு வைப்பு தொகை வசூலிக்கப்படும்.

அதன்படி நடப்பு நிதியாண்டில் 36 லட்சம் பேரிடம் இருந்து 500 கோடி ரூபாய் வசூலிக்க திட்டமிடப்பட்டது.ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதித்ததால், கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால், மின் வாரியத்திற்கு நிதி நெருக்கடி அதிகரித்ததை அடுத்து, வங்கிகளிடம் இருந்து கடன் வாங்க முடிவு செய்துள்ளது.மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நடைமுறை மூலதன செலவுகளை சமாளிக்க, பல வங்கிகளிடம் இருந்து கடன் வாங்குவது குறித்து பேசப்பட்டு வருகிறது. எவ்வளவு தொகை என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE