சென்னை: ''பல்கலை வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் படம் வைக்க முடியாது,'' என, 'செனட்' கூட்டத்தில் துணை வேந்தர் தெரிவித்தார்.சென்னை பல்கலை ஆட்சிமன்ற பேரவையான 'செனட்' உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம், துணை வேந்தர் கவுரி தலைமையில் நேற்று நடந்தது.
சட்டசபை பிரதிநிதியாக, தி.மு.க., - எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி பேசும்போது, ''சென்னை பல்கலையை, சர்வதேச அளவில் சிறந்த பல்கலையாக உயர்த்த வேண்டும். அதற்கு முதல்வர் ஸ்டாலின் உதவுவார்,'' என்றார்.

பின், துணை வேந்தர் கவுரி பேசியதாவது:பல்கலை பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கே, பல்வேறு திட்ட நிதியை பயன்படுத்த வேண்டியுள்ளது. பல்கலை நிதி நிலைமை மோசமாக உள்ளது. நிதியை பெருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கல்வி வளர்ச்சி பணிகளில் சிறப்பாக செயல்படும் தமிழக முதல்வர், சென்னை பல்கலை கல்வி வளர்ச்சிக்கும், நிதி நிலைமை மேம்படவும் உதவுவார் என, எதிர்பார்க்கிறோம். இந்த கூட்டத்தில் செனட் உறுப்பினராக பங்கேற்றுள்ள, தி.மு.க., - எம்.எல்.ஏ., மூர்த்தி, அரசு தரப்பில் இதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, பேராசிரியர் மணிவாசகம் எழுந்து, ''தமிழக முதல்வரை பற்றி புகழுரை கூறுகிறீர்கள். அவரது படத்தை பல்கலை வளாகத்தில் வைக்கலாமே. பல்கலையின் எந்த அறையிலும் முதல்வர் ஸ்டாலின் படம் இல்லை,'' என்றார்.

இதற்கு பதிலளித்த துணைவேந்தர் கவுரி, ''முதல்வரின் சிறப்பான கல்வி பணிகளை பாராட்டினேன். தனிப்பட்ட நோக்கம் எதுவும் இல்லை. முதல்வர் படத்தை, பல்கலை வளாகத்தில் வைக்க முடியாதது, எனக்கும் வருத்தம் தான்.ஆனால், பல்கலையின் விதிப்படி, முதல்வர்களின் படம் வைக்க அனுமதி இல்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE