சென்னை: தமிழகத்தில் நவ., 5ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி தடுப்பூசிகள் செலுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கொரோனா காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதமாகின. 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 1 முதல் 8 ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 5ம் தேதி முதல் பள்ளி வளாகங்களிலேயே 5 முதல் 6 வயது வரை உள்ள மாணவர்களுக்கு டிபிடி எனப்படும் தொண்டை அடைப்பான் (டிப்தீரியா), கக்குவான் இருமல் (பெர்ட்டூசிஸ்), ரணஜன்னி (டெட்டன்ஸ்) தடுப்பூசியை வழங்க வேண்டும். 10 வயதான மாணவர்களுக்கு ரணஜன்னி தடுப்பூசி வழங்க வேண்டும்.
இந்த நடவடிக்கையை டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்வது அவசியம். பள்ளியில் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.