புதுடில்லி: ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி தலைநகர் ரோம் சென்ற பிரதமர் மோடி, வாடிகன் நகரத்திற்குச் சென்று போப்பை சந்தித்தார். அப்போது அவர் பயணிக்க டாக்சி ஒதுக்கப்பட்டதாக போலியான புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளில் பாதிக்கும் மேல் பொய் செய்திகளாக இருக்கின்றன. இதை கண்டறிந்து களைய சமூக ஊடகங்களும், மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் ஏதேனும் ஒரு வகையில் பொய்யான செய்தியை கூச்சமேயின்றி பரப்பி விடுகின்றனர். அரசியல் தலைவர்கள் பற்றிய போலி செய்திகள், படங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன. இதற்கு கட்சி பேதமேயில்லை. துண்டு துக்கடா கட்சிகளிலிருந்து தேசிய கட்சிகள் வரை இதில் ஈடுபடுகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த வெள்ளியன்று (அக்., 29) வாடிகனில் போப் பிரான்சிஸ்ஸை சந்திக்கச் சென்றார். அவருடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் உடனிருந்தார். 20 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமரும், போப்பும் ஒரு மணி நேரம் காலநிலை மாற்றம், வறுமை உள்ளிட்ட விஷயங்கள் பற்றி பேசினர். போப்பை இந்தியா வருமாறு மோடி அழைப்பு விடுத்தார். அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட போப் சிறந்த பரிசு என குறிப்பிட்டார்.
வாடிகனுக்கு மோடி சென்ற காரின் புகைப்படங்களை போட்டோஷாப் செய்து டாக்சி போன்று சித்தரித்து, இத்தாலியில் மோடிக்கு கிடைத்த மரியாதை இது தான் என விஷமிகள் சிலர் பரப்பிவிட்டுள்ளனர். அதை உண்மையென்று நம்பி எதிர்க்கட்சியினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள உண்மையான புகைப்படம் மற்றும் வீடியோவில் பிரதமர் பயணித்த காரில் டாக்சி என்ற வாசகம் முன்னேயும், பின்னேயும் இடம்பெறவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE