புது டில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினமான இன்று (அக்., 31) காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட வீடியோவில், “எனது பாட்டி ஒரு முறை எங்களிடம், நோயால் இறப்பது தான் மிகப்பெரிய சாபம் என்றார். அவரைப் பொறுத்தவரை நாட்டுக்கு இதுப் போன்று இறப்பது தான் சிறந்த வழி.” என உருக்கமாக கூறினார்.

இந்திரா, நாட்டின் முதல் மற்றும் இதுவரை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண்மணி. 1984-ல் பொற்கோயிலில் புகுந்திருந்த காலிஸ்தான் அமைப்பினரை அழிக்க ராணுவ நடவடிக்கை எடுத்தார். இவ்விவகாரம் பெரும் சர்ச்சையானது. ராணுவம், சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த சீக்கியர்கள் ராஜினாமா செய்தனர். ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். தொடர்ந்து 31 அக்டோபர் 1984 அன்று, இந்திரா இரண்டு சீக்கிய மெயக்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பெரும் கலவரம் மூண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இன்று அவரை நினைவு கூரும் விதமாக ராகுல் வீடியோ ஒன்றை யுடியூபில் வெளியிட்டுள்ளார். அதில் இந்திராவின் இறுதி நிமிட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது 14 வயது சிறுவனான ராகுல் தனது பாட்டியை நினைத்து தேம்பி அழுகிறார். தான் கொல்லப்படுவோம் என்பதை தனது பாட்டி உணர்ந்திருந்ததாக சொல்லும் ராகுல், “இறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு 'எனக்கு ஏதாவது நேர்ந்தால் அழாதே' என்றார். அவர் என்ன சொன்னார் என்று எனக்கு அப்போது புரியவில்லை.” என்று அந்த வீடியோவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “தான் கொல்லப்படுவோம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். வீட்டில் உள்ள அனைவரும் அதை உணர்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒருமுறை, எங்கள் அனைவரிடமும், சாப்பாட்டு மேஜையில், 'ஒரு நோயால் இறப்பதே மிகப்பெரிய சாபமாக இருக்கும்' என்றார். அவரை பொறுத்தவரை இதுவே இறப்பதற்குச் சிறந்த வழி. அவருடைய நாட்டிற்காக, அவர் விரும்பியபடி இறந்துள்ளார்.” இவ்வாறு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE