திருப்பூர்:திருப்பூர் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் குளிக்கச் சென்ற மூன்று சிறுமியரை தண்ணீர் இழுத்து சென்றது. இதில், இரு சிறுமியரை தோழி மற்றும் சிலர் உயிருடன் மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் வலையபாளையத்தைச் சேர்ந்தவர்கள் இந்திராணி, 14;
ராதாமணி, 13; யோகலட்சுமி, 14; சுமதி, 13; சுமித்ரா, 13; சகுந்தலா தேவி, 14. அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
நீச்சல் தெரியாது
நேற்று முன்தினம், ஆறு சிறுமியரும் கள்ளிமேட்டுப்பாளையம் பி.ஏ.பி., வாய்க்கால் படிக்கட்டில் அமர்ந்து விளையாடினர். இந்திராணி தவிர மற்ற ஐந்து பேருக்கும் நீச்சல் தெரியாது.திடீரென சகுந்தலா தேவி, சுமதி, யோகலட்சுமி ஆகியோரை தண்ணீர் இழுத்து சென்றது. இந்திராணி தன் உயிரை பொருட்படுத்தாது, தோழியரைக் காப்பாற்ற வாய்க்காலில் குதித்து, யோகலட்சுமியை இழுத்து பிடித்தார். குழாயைப் பற்றிக் கொள்ளுமாறு யோகலட்சுமியிடம் கூறிவிட்டு, இந்திராணி நீச்சல் அடித்து மேலே வந்தார்.
இதற்குள்சிறுமியரின் அலறலை, அவ்வழியாக சென்ற வேன் டிரைவர்கள் சொக்கநாதன், 28; பச்சையப்பன், 30, கேட்டு உள்ளனர்.
உதவிய பெண்
அவர்கள் வாய்க்காலுக்குள் குதித்து, யோகலட்சுமி, சுமதியை காப்பாற்றினர். அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த சுதா, 35, என்பவர், தான் அணிந்திருந்த சேலையை வீசி உதவினார்.
சகுந்தலா தேவியை, தண்ணீர் அடித்து சென்றது. பல்லடம் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
இந்திராணியின் தீரம்
சிறுமி இந்திராணி கூறுகையில், ''வாய்க்காலில் தவறி விழுந்த யோகலட்சுமியை இழுத்து
வந்தேன். ஆனால், சிரமமாக இருந்ததால் அங்குள்ள குழாயைப் பற்றிக் கொள்ளுமாறு
கூறிவிட்டு, நான் நீச்சல் அடித்து மேலே வந்து விட்டேன். அவள் குழாயைப் பற்றி தொங்கிக் கொண்டிருந்தாள். டிரைவர்கள், தோழியரை காப்பாற்ற உதவினர். இந்த சம்பவத்தை
வாழ்நாளில் மறக்க முடியாது,''என்றார்.