புதுடில்லி-'சைகோவ் - டி' தடுப்பூசியின் ஒரு 'டோஸ்' விலையை 265 ரூபாயாக நிர்ணயிக்க, அதன் தயாரிப்பு நிறுவனமான, 'சைடஸ் கேடிலா' சம்மதம் தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்காக, சைகோவ் - டி என்ற தடுப்பூசியை, குஜராத்தின் ஆமதாபாதை தலைமையிடமாக வைத்து இயங்கும் சைடஸ் கேடிலா என்ற நிறுவனம் தயாரித்து உள்ளது. ஊசி இல்லாமல் 'இன்ஜெக்டர்' எனப்படும் சிறப்பு கருவி வாயிலாக செலுத்தப்பட வேண்டிய இந்த தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்த சைகோவ் - டி தடுப்பூசிக்கு விலை நிர்ணயிக்கும் பணிகள் நடந்து வந்தன.இது தொடர்பாக சைடஸ் கேடிலா நிறுவனத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து பேச்சு நடந்து வந்தது.இந்நிலையில், சைகோவ் - டி தடுப்பு மருந்தின் ஒரு டோஸ் விலையை 265 ரூபாயாக நிர்ணயிக்க, அந்த நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த மருந்தை செலுத்த பயன்படுத்தப்படும் கருவியின் விலை 93 ரூபாயாக உள்ளது. எனவே மொத்தமாக ஒரு டோசின் விலை 358 ரூபாயாக நிர்ணயிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.இந்த வாரத்திற்குள் இதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.