உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்
பா.விஜய், மெக்லீன், அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையை, இரு திராவிடக் கட்சிகளும் செவ்வனே செய்து வருகின்றன.அடுத்த வேளை சோற்றுக்காகத் திருடியவனும், 500 ரூபாய் லஞ்சம் வாங்கியவனும், சிறையில் தள்ளப்பட, கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்தோர் கும்மாளம் போடும் காட்சிகள் தினமும் அரங்கேறி வருகின்றன.
ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும் மக்கள் பணத்தை திருடுகின்றனர்; கனிம வளத்தை கொள்ளையடிக்கின்றனர்!குன்றிமணி எடை அளவு தங்கத்தைக் கூட காணாத உழைப்பாளிகள் இருக்கும் நம் நாட்டில், அரசியல்வாதிகளிடம் மட்டும் எப்படி கிலோக்கணக்கில் தங்கம் சேர்கிறது?
சம்பளமே இல்லாத உள்ளாட்சி பதவியை பிடிக்க, கோடிக்கணக்கான பணத்தை அரசியல்வாதிகள் செலவழிக்கின்றனரே... அது ஏன்?இதை எல்லாம், எந்தத் தமிழனும் சிந்திப்பதாகத் தெரியவில்லை!ஊழல் தலைவரின் வீட்டில், 'ரெய்டு' நடக்கும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கூடுவது, உலகில் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு மோசமான முன்னுதாரணம் தமிழகத்தில் அரங்கேறி உள்ளது.என்ன செய்வது...

நம் தமிழ் மக்கள், 'ஓசி' சோற்றுக்கு அலையும் அற்பமாக மாறி விட்டனரே!'ஊழல் பெருச்சாளிகள்' எல்லாம், 'சட்ட ரீதியாக எதிர் கொள்வோம்' என பேட்டி அளிக்கின்றனரே... அதன் அர்த்தம் என்ன?'சட்டத்தில் இருக்கும் அத்தனை ஓட்டைகளும் எங்களுக்கு அத்துபடி!' என்பது தான்!தலையில் மிளகாய் அரைக்க நாம் இடம் கொடுப்பதால் தான், அரசியல்வாதிகள் இவ்வளவு ஆட்டம் போடுகின்றனர்.
இளைஞர்கள், நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் தவறு செய்வோரைப் பொது வெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும்; அவர்களின் உண்மையான முகத்தை மக்களிடம் வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டும்.நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE