பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா அறிக்கை: கடையம் ஒன்றிய குழு தலைவராக பொறுப்பேற்ற செல்லம்மாளிடம் தி.மு.க., ஒன்றியச் செயலாளர் சிவபத்மநாபன், 1.1 கோடி கேட்டு நிர்பந்தித்ததால் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அந்த ராஜினாமாவை ஏற்கக் கூடாது. மேலும் தி.மு.க., செயலர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
அட பாவமே, இப்படி எல்லாம் செய்வரா... விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் அர்த்தமே இல்லையே!
தமிழக பா.ஜ., சிறுபான்மை அணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கிளாரன்ஸ் அறிக்கை: இத்தாலி நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்ததோடு, உலக கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் உயர்ந்த மத குருவான போப் பிரான்சிசை ஆரத்தழுவி, ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசியுள்ளார். பிரதமர் ஒரு மதவாதி அல்ல; அவர் தேசியவாதி, மதங்களை கடந்த மனித நேயம் காட்டுபவர் என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.
இதை பலரும் அறிவர். எனினும், சில மதவாதிகளும், மதவாதிகள் இல்லை என காட்டிக் கொள்ளும் சில கட்சிகளும் தான், அவரை கண்டித்து எழுதி வருகின்றன.
பா.ம.க., இளைஞர் அணித் தலைவர் அன்புமணி அறிக்கை: பொள்ளாச்சியை அடுத்த முத்துாரைச் சேர்ந்த மாணவர் கீர்த்திவாசன், மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில், தற்கொலை செய்துக் கொண்டது, அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர்களை காக்க, நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்.

இப்படி, அச்சப்பட்டவர் எப்படி டாக்டராகி, அச்சப்படாமல், நோய்களுக்கு சிகிச்சை அளித்து, அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்க முடியும். எனவே, நீட் தேர்வுக்கும், இந்த தற்கொலைகளுக்கும் முடிச்சு போடாதீர்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலர் வன்னி அரசு அறிக்கை: தமிழகத்தின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி விளங்கும்.
எல்லா கட்சிகளுக்கும் இந்த எண்ணம் இருக்கும். எனினும், முடிவு செய்ய வேண்டியது மக்கள் தானே தவிர, கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் அல்ல என்பது உங்களுக்கு தெரியாமல் போனதேன்...
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: மாமல்லபுரம் ஸ்தல சயனப் பெருமாள் கோவிலில், கோவிலில் அன்னதானம் சாப்பிட வந்த, நரிக்குறவ பெண் அஸ்வினிக்கு உணவு வழங்காமல், கோவில் ஊழியர் வெளியேற்றியதாக புகார் எழுந்தது. புறக்கணித்தவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும், கோவில்களின் வழங்கப்படும் அன்னதானம், உண்மையான ஏழைகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய முடியுமா உங்கள் கட்சியால்...
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE