சென்னை: ஐந்து சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி ஒரு குடும்பத்தினர் மார்ச் 31, 2021 வரை 5 சவரனுக்கு உட்பட்டு (மொத்த எடை 40 கிராம் வரை) பொது நகைக்கடன் பெற்று அதில் சில கடன்தாரர்கள் நாளது தேதிவரை தங்களது நிலுவைத் தொகையினை பகுதியாக செலுத்தியது நீங்கலாகவும், தகுதி பெறாத நேர்வுகளை நீக்கிய பின்னரும் இந்த அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை நிலுவையில் உள்ள ரூ.6 ஆயிரம் கோடி (தோராயமாக) நகைக்கடன்களை வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி அனைத்து கூட்டுறவுச் சங்கங்களுக்கும் அறிவுரை வழங்கும்படி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கேட்டுக் கொள்ளப்படுகிறார். இந்த நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படுவதன் மூலமாக தமிழகத்தில் சுமார் 16 லட்சம் நகைக் கடன்தாரர்கள் பயன் பெறுவார்கள்.

கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படும் நகைக்கடன்கள் அனைத்தும் சங்கத்தின் சொந்த நிதியிலிருந்து, அதாவது பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட வைப்பு தொகையிலிருந்து வழங்கப்பட்டுள்ளதால், மேற்குறிப்பிட்ட தள்ளுபடியில் உள்ள அசல் தொகை மற்றும் ஏப்.,1 முதல் இவ்வரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை அதற்குரிய வட்டியினை அரசு ஏற்றுக்கொண்டு கூட்டுறவு நிறுவனங்களுக்கு தள்ளுபடி தொகையினை அரசு வழங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE