கோவையில் குடியேறிய 'மாண்புமிகு' சிட்டிசன்...:மலை போல குவியுது மக்கள் பெட்டிஷன்!

Updated : நவ 02, 2021 | Added : நவ 01, 2021
Share
Advertisement
மித்ரா வீட்டிற்குள் ஸ்வீட் பாக்ஸ் உடன் நுழைந்த சித்ரா, மித்ராவின் அம்மாவிடம் அதைக் கொடுத்து, ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு, ''அம்மா! உங்க கையால ஒரு சூப்பர் பில்டர் காபி வேணும்!'' என்று சொல்லி விட்டு, ஹாலில் உட்கார்ந்தாள். தன் அறையிலிருந்து தற்செயலாக ஹாலுக்கு வந்த மித்ரா, ''அக்கா! என்ன சர்பிரைஸ் விசிட்டா இருக்கு!'' என்று துள்ளிக் குதித்தாள்.''நான் என்ன கரன்ட்
 கோவையில் குடியேறிய 'மாண்புமிகு' சிட்டிசன்...:மலை போல குவியுது மக்கள் பெட்டிஷன்!

மித்ரா வீட்டிற்குள் ஸ்வீட் பாக்ஸ் உடன் நுழைந்த சித்ரா, மித்ராவின் அம்மாவிடம் அதைக் கொடுத்து, ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு, ''அம்மா! உங்க கையால ஒரு சூப்பர் பில்டர் காபி வேணும்!'' என்று சொல்லி விட்டு, ஹாலில் உட்கார்ந்தாள்.

தன் அறையிலிருந்து தற்செயலாக ஹாலுக்கு வந்த மித்ரா, ''அக்கா! என்ன சர்பிரைஸ் விசிட்டா இருக்கு!'' என்று துள்ளிக் குதித்தாள்.

''நான் என்ன கரன்ட் மினிஸ்டரா...கரெக்டா சொல்லிட்டு வர்றதுக்கு?'' என்று சிரித்த சித்ரா, ''மக்கள் சபைங்கிற பேர்ல, வீதி வீதியா இறங்கி அடிக்கிறாரே செந்தில்பாலாஜி...அதுக்கு என்ன ரெஸ்பான்ஸ்ன்னு தெரிஞ்சிட்டுப் போகலாம்னு தான் வந்தேன்!'' என்றாள்.

''நிறையாத் தகவல் இருக்கு...பேசுவோம். அஞ்சே நிமிஷத்துல வந்துர்றேன். டிவி பார்த்துட்டு இருங்க!'' என்று சொல்லிவிட்டு, அறைக்குள் மறைந்தாள் மித்ரா.

தீபாவளிக்கு வீட்டில் சுட்ட முறுக்குடன், பில்டர் காபியை வைத்துவிட்டுப் போனார் மித்ராவின் அம்மா. அதை ருசித்துக் கொண்டே, டிவி சேனல்களை மாற்றினாள் சித்ரா.

மியூசிக் சேனலில், 'நான் ஆணையிட்டால்...அது நடந்து விட்டால்!' என்று எம்.ஜி.ஆர்., சாட்டையைச் சுழற்றிக் கொண்டிருந்தார். புது டிரஸ்களுடன் வந்த மித்ரா, ''நான் என்ன சொல்லணும்னு வந்தேனோ, அதுதான்க்கா டிவியில ஓடிட்டு இருக்கு!'' என்று ஆர்வத்தோடு அரசியல் அரட்டையை ஆரம்பித்தாள்...

''அவர் வந்ததுல கோவை தி.மு.க.,வுக்கே குருப்பெயர்ச்சி ஆரம்பமாயிருச்சுன்னு உடன்பிறப்புகள் எல்லாம் உற்சாகமா இருக்காங்க. ஆனா பல பேருக்கு உதறல் எடுக்க ஆரம்பிச்சிருச்சு. அவரோட டீம்ல இருந்து 30 யங்ஸ்டர்களை நம்ம ஊர்ல வந்து இறக்கிருக்காரு. அவுங்கதான் இந்த மக்கள் சபைக்கான எல்லா வேலைகளையும் தீயாப் பாக்குறாங்க!''

''அதை விடு....நீ ஏதோ எம்.ஜி.ஆர். பாணின்னு சொன்னியே... அது என்னது?''

''பெரிய பெரிய திட்டங்களைச் செய்யுறதை விட, கீழ்த்தட்டு மக்களுக்குத் தேவையான விஷயங்களை உடனுக்குடனே செஞ்சு கொடுத்து, அவுங்க மனசைக் கவர்றதுதான் எம்.ஜி.ஆர்., பாணி. கோயம்புத்துார்ல பெருசு பெருசா பாலம் கட்றீங்க, குளத்துல 500 கோடியைக் கொட்டிருக்கீங்க. இதனால, சாதாரண ஜனங்களுக்கு என்ன பிரயோஜனம்னு கேக்குறாராம் செ.பா.,!''

''அதுவும் லாஜிக்காதான் இருக்கு!''

''அம்பது வருஷத்துல பல பேரு சம்பாதிச்சதை அஞ்சே வருஷத்துல ஒருத்தர் சம்பாதிக்கிறதுக்காக பெரிய பெரிய திட்டங்களாப் போட்ருக்காங்க. அந்த காசை வச்சே ஓட்டு வாங்கி ஜெயிச்சிருக்காங்க. இப்போ நம்ம கட்சி டெவலப் ஆகணும்னா கீழ இருக்குற மக்களுக்குச் செய்யணும்னு சொல்லித்தான் 100 வார்டுலயும் வார்டுக்கு ஒரு இடம்னு மக்கள் சபை கூட்டத்தை நடத்த ஆரம்பிச்சிருக்காரு. அவரோட டிரைவைப் பார்த்துட்டு, நம்மூரு 'மாவட்டங்களே' ஆடிப்போய்த்தான் இருக்காங்களாம்!''

''அப்பிடி என்ன பண்றாராம்?''''அவர் வந்த அன்னிக்கு ஏர்போர்ட் பக்கத்துல, 'மாவட்டம்' சார்புல அமர்க்களமா வரவேற்பு கொடுத்திருக்காங்க. அப்போ மினிஸ்டரைப் பார்த்து, 'அது மாப்ள, இது மாப்ள'ன்னு ரொம்ப உரிமையாப் பேசிருக்காரு சின்னப்பையன் பேர்ல இருக்குற பெரிய மனுஷன்...அதுக்கு செந்தில் பாலாஜி, 'இந்த மாப்ள மச்சான் வேலையெல்லாம் வேணாம், நம்ம கட்சியில எல்லாரும் அண்ணன் தம்பிதான். நான் தலைவர் சொன்னபடி கட்சி வேலையைப் பார்க்க வந்திருக்கேன். என்னைய வேலை பார்க்க விடுங்க'ன்னு சொல்லீட்டாராம்!''

''நெத்தியடி...வாராவாரம் இனிமே வருவாரா?''

''ஆமாக்கா...பீளமேட்டுல ஒரு வீடு பார்த்து, கோயம்புத்துார்ல குடியேறிட்டாராம். முதல் நாள் மக்கள் சபை நடத்துனப்போ, கலெக்டர், கார்ப்பரேஷன் கமிஷனரெல்லாம் பார்த்து, ஒரு நுாறு 150 பெட்டிசன் வருமான்னு மினிஸ்டர் கேட்டாராம். அன்னிக்கு மட்டும் 3800 பெட்டிசன்ஸ் வந்திருக்கு. மறுநாள் 'மாஜி' மினிஸ்டர் வேலுமணி தொகுதியில அதுக்கு மூணு மடங்கா வந்திருக்கு. முதல் ரெண்டு நாள்ல மட்டும் 12,959 மனுக்கள் வந்திருக்கு. ஊருக்குள்ள எவ்ளோ பிரச்சினை இருக்குன்னு பாருங்கன்னு அவரே மெரண்டுட்டாராம்!''மித்ரா பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட சித்ரா,

''பெட்டிசன் வாங்குறாங்க. வேலை நடக்குமா...மேயர் எலக்சனுக்குதான இவ்ளோ தயாராகுறாங்க. நேரடித் தேர்தலா, மறைமுகத் தேர்தலா, மேயர் வேட்பாளரைத் தயார் பண்ணீட்டாங்களா?''

''கண்டிப்பா வேலை வாங்கிருவார்னு சொல்றாங்க. மேயருக்கு மறைமுகத் தேர்தல்தானாம்...முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியோட மகன், மருமகன் ரெண்டு பேரும் டிரை பண்றாங்களாம். மாஜி மேயர் ராஜ்குமார், தேர்தலுக்கு முன்னாலயே கட்சிக்கு வந்திருக்காரு. தேர்தலுக்கு அப்புறம் மக்கள் நீதி மய்யத்துல இருந்து வந்த மகேந்திரனும் காய் நகர்த்துவாரு. துணை மேயரா இருந்த கார்த்திக், கடுமையா முயற்சி பண்ணுறாரு!''

''அப்போ லேடீஸ்க்கு வாய்ப்பில்லையா?''

''இல்லைங்கிறாங்க. அப்பிடி வந்தா மீனா ஜெயக்குமாரும், மீனா லோகுவும் நீயா நானான்னு போட்டி போடுவாங்க. கூட்டணிக் கட்சிகளுக்கும் மேயர் சீட் ஒதுக்கணும். ஆனா கோயம்புத்துாரைக் கண்டிப்பாக் கொடுக்கப் போறதில்லையாம்!'' என்ற மித்ரா,

''அ.தி.மு.க.,வுல என்னக்கா நடக்குதாம்?'' என்று ஆர்வமாய்க் கேட்டாள்...

''அவுங்க ஊர் ஊரா ஊழியர் கூட்டம் நடத்திட்டு இருக்காங்க. வேலுமணி தலைமையில நடந்த கூட்டத்துல, வடக்கு எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன் பேசுறப்போ, 'உள்ளாட்சில ஜெயிக்கலைன்னா எம்.எல்.ஏ., எலக்சன்ல ஜெயிச்சதுக்கு பிரயோஜனமே இல்லை. அப்புறம் நமக்கு எந்த மரியாதையும் இருக்காது. ஒரு பூஜை போட்டாக் கூட நம்மள கூப்புட மாட்டாங்க அதனால ஜெயிச்சே ஆகணும்'னு பேசிருக்காரு!''

''ஆனா மத்த எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம், ஒவ்வொரு வார்டுக்கும் மூணு பேரை செலக்ட் பண்ணி, அதுல ஒருத்தரே நீங்களே வேட்பாளரா முடிவு பண்ணுங்கன்னு எக்ஸ்கிட்ட ஒப்படைச்சிட்டு, வாலண்டியரா வண்டியில இருந்து இறங்கீட்டாங்களாமே!''

''அப்பிடித்தான் சொன்னாங்க....ஆனா கார்ப்பரேஷன்ல கவுன்சிலர் சீட் வேணும்னா, 40 லட்சம் செலவழிக்கணும்னு இப்பவே ஒரு ரேட் பிக்ஸ் பண்ணிட்டதா ஒரு தகவல் ஓடுது. கட்சியில இல்லாதவுங்க எல்லாம், இப்பவே புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க!'' என்றாள் சித்ரா.

தற்செயலாக ஸ்போர்ட்ஸ் சேனலைப் பார்த்த மித்ரா, ''அக்கா! நம்ம ஊருல ஆயிரத்துக்கும் மேல ரிசர்வ் சைட் இருக்கு. ஆனா ஒரு இடத்துல கூட ஷட்டில், பேட்மின்டன் விளையாடுறதுக்கு ஒரு இன்டோர் ஸ்டேடியம் கூட கட்டாம வச்சிருக்காங்களே!'' என்று கேட்டாள்.

''உண்மைதான் மித்து....சென்னையில நுாத்துக்கு மேல இண்டோர் ஸ்டேடியம் இருக்கு. கார்ப்பரேஷனே அதை குத்தகைக்கு விடுறாங்க. ஆனா நம்ம ஊர்ல ரிசர்வ் சைட்களை மக்களே ரெடி பண்ணி விளையாடுனாலும், அதையும் தடுக்குறதுக்கு நாலு பேரு அலையுறாங்க!'' என்றாள் சித்ரா.

''நீ குனியமுத்துார்ல நடந்த மறியலைத்தான சொல்ற...அங்க என்னதான் நடந்துச்சாம்?''

'' அந்த ஏரியாவுல, நிர்மல மாதா ஸ்கூல் பக்கத்துல ஜெயா நகர்ன்னு ஒரு அப்ரூவ்டு லே-அவுட் இருக்கு மித்து....அங்க இருந்த ரிசர்வ் சைட்டை, அதே ஏரியாவுல குடியிருக்குற பல பேரு சேர்ந்து லட்ச ரூபாய்க்கு மேல செலவழிச்சு, ஷட்டில் கிரவுண்ட் ரெடி பண்ணிருக்காங்க. அங்க யாரும் விளையாடக்கூடாதுன்னு ரெண்டு பேரு தகராறு பண்ணிருக்காங்க!''

''அதுல அவுங்களுக்கு என்ன பிரச்னையாம்?''

''எல்லாம் ஈகோ பிரச்னைதான்...ரெண்டு தரப்புக்கும் மோதலாகி, மெஜாரிட்டி மக்கள் மறியலே பண்ணீட்டாங்க. விளையாடுறவுங்க எல்லாம் சேர்ந்து போலீஸ் கமிஷனர், கார்ப்பரேஷன் கமிஷனரைப் பார்த்து இதை கம்ப்ளைன்ட் பண்ணிருக்காங்க. அவுங்களும் 'நீங்க விளையாடுங்க. அதெல்லாம் யாரும் தடுக்க முடியாது'ன்னு சொல்லீட்டாங்களாம். திரும்பவும் விளையாட ஆரம்பிச்சப்போ, அந்த மண்டல ஆபீசர், அந்த கிரவுண்ட் காம்பவுண்டுக்கு திடீர்னு பூட்டுப் போட்டுட்டாராம்!''

''பேரறிஞர் பேரைக் கொண்டவர்தான அங்க இருக்காரு....!''

''அவரேதான்...பூட்டுப் போட்ட தகவலை கார்ப்பரேஷன் கமிஷனர்ட்ட கொண்டு போயிருக்காங்க... கடுப்பான அந்த மண்டல ஆபீசர், அந்த கிரவுண்டைத் திறந்து விட்டுட்டு, விளையாடக்கூடாதுன்னு பிரச்னை பண்ணுனவுங்கள்ட்ட சொல்லி, அவுங்க தயார் பண்ணி விளையாடுன இடத்துல ஜேசிபியை வச்சு தோண்டி, மரங்களை நட வச்சிருக்காரு!''

''இந்த மாதிரி ஆபீசர்களை வச்சிருந்தா, கவர்மென்ட்டுக்குதான் தேவையில்லாத கெட்ட பேரு வரும்!'' என்று கொதித்தாள் மித்ரா.

''கரெக்ட் மித்து! ஒரு சில ஆபீசர்கள் இருந்தாலும் பிரச்னை, மாத்துனாலும் பிரச்னை!'' என்று அடுத்த டாபிக்கிற்கு அட்வர்டைஸ்மென்ட் போட்டாள் சித்ரா.

''என்னக்கா...நீ சொல்றதுல ஏதோ ஒரு உள் மேட்டர் இருக்கு போலிருக்கே!''

''ஆமா மித்து...! கோயம்புத்துார் வடக்குல இதுக்கு முன்னாடி இருந்த ஒரு தாசில்தார், செங்கல் சூளைகளுக்கு மண் அள்ள விடுறது, பட்டா பேரு மாத்துறதுன்னு, லே-அவுட்களுக்கு என்ஓசி கொடுக்குறதுன்னு எல்லாத்துலயும் வசூல் தட்டி எடுத்தாரு. தான் செய்யுற தப்பெல்லாம் வெளிய வரக்கூடாதுன்னு பயந்து, டுபாக்கூர் ரிப்போர்ட்டர்ஸ்க்கெல்லாம் மாசாமாசம் மாமூல் கொடுத்துட்டு இருந்தாரு!''

''அவர்தான் பேர்லயே கேஷ் வச்சிருக்கிறவரு ஆச்சே...!''

''அவருக்குப் பதிலா, இப்போ ஒரு லேடி ஆபீசரைப் போட்ருக்காங்க. அவுங்கள்ட்டயும் இந்த டுபாக்கூர் ரிப்போர்ட்டர்ஸ் போய், தீபாவளி காசு கொடுங்க, இத்தனை ஸ்வீட் பாக்ஸ் வாங்கிக் கொடுங்கன்னு டார்ச்சர் கொடுக்குறாங்களாம்''

''சிட்டியில மட்டுமில்லைக்கா...நம்ம ஸ்டேட் பார்டர் வரைக்கும் இவுங்க வசூல் நடக்குது. வாளையார், க.க.சாவடி ஆர்.டி.ஓ., செக்போஸ்ட்ல தொடங்கி, ஆனைகட்டி போலீஸ் செக்போஸ்ட் வரைக்கும் ஒரு இடம் விடாம, கவர்மென்ட் ஆபீசர்களை மிரட்டி மிரட்டி காசு பறிக்கிறாங்களாம். மாசாமாசம் வந்து வாங்குறதோட, இப்போ தீபாவளிக்கு ஸ்பெஷல் வசூல் வேட்டை நடத்திட்டு இருக்காங்க!''

''காசு கொடுக்காத ஆபீசர்களை என்னதான் செய்வாங்களாம்?''

''எதையாவது தாறுமாறா எழுதி, பத்து நுாறு புத்தகத்தை பிரிண்ட் பண்ணி, அதை அந்த ஆபீஸ்கள்ல போய் அவுங்களே டெலிவரி பண்றாங்க. அதைப் பார்த்து பயந்தே பல ஆபீசர்கள், இவுங்க கேக்குறதைக் கொடுக்குறாங்க. இதெல்லாம் கன்ட்ரோல் பண்ண வேண்டிய பி.ஆர்.ஓ.,வே அவுங்களுக்குப் பயந்துட்டு இருக்காராம்!'' என்றாள் மித்ரா.

''போலீஸ் மேட்டர் ஒண்ணுமில்லையா மித்து?''

''போலீஸ்க்கு இந்த வாரம் நாமளாவது லீவு கொடுத்துரலாம்க்கா...ஆனா ஒரே ஒரு மேட்டர். தொண்டாமுத்துார்ல கவர்மென்ட் காலேஜ்க்குக் கட்டிருக்குற புதுக் கட்டிடத்தை, சென்னையில இருந்து சி.எம்., திறந்து வச்சிட்டாரு. தொகுதி எம்.எல்.ஏ.,ங்கிற முறையிலயும், இந்த காலேஜ் வர்றதுக்கும், கட்டடத்துக்கு நிதி ஒதுக்குறதுக்கும் காரணமானவர்ங்கிற முறையிலயும் எக்ஸ் மினிஸ்டர் வேலுமணியைக் கூப்பிட்டு, குத்து விளக்கு ஏத்திருக்காங்க. ஆனா அவர் வர்ற தகவலே, உளவுத்துறைக்கே தெரியலையாம்...இது எப்பிடி இருக்கு?''

''சரி மித்து! மழை வர்றதுக்குள்ள நான் கிளம்புறேன்....ஹேப்பி தீவாளி!'' என்று கட்டியணைத்து வாழ்த்துச் சொல்லி விட்டு, வண்டியைக் கிளப்பினாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X