'தலையாட்டி பொம்மை' ஆன அதிகாரி்கள்!

Updated : நவ 02, 2021 | Added : நவ 01, 2021
Advertisement
''வா, மித்து... பட்டாசு, துணியெல்லாம் வாங்கியாச்சா...'' என, தீபாவளி உற்சாகத்துடன், வரவேற்றாள் சித்ரா.''வாங்கியாச்சுக்கா. விலை கொஞ்சம் அதிகம்தான்'' என்று அங்கலாய்த்த மித்ரா, ''அரசு அலுவலகங்கள்ல, தீபாவளி வசூல் களைகட்டுதாமே... ஆனா, இதை லஞ்ச ஒழிப்பு போலீஸ்ல, உன்னிப்பா கவனிக்கறாங்களாம்'' என சரவெடியாய் பேச்சை துவக்கினாள்.''தாராபுரத்துல இருக்கிற ஊராட்சி ஒன்றிய
 'தலையாட்டி பொம்மை' ஆன அதிகாரி்கள்!

''வா, மித்து... பட்டாசு, துணியெல்லாம் வாங்கியாச்சா...'' என, தீபாவளி உற்சாகத்துடன், வரவேற்றாள் சித்ரா.

''வாங்கியாச்சுக்கா. விலை கொஞ்சம் அதிகம்தான்'' என்று அங்கலாய்த்த மித்ரா, ''அரசு அலுவலகங்கள்ல, தீபாவளி வசூல் களைகட்டுதாமே... ஆனா, இதை லஞ்ச ஒழிப்பு போலீஸ்ல, உன்னிப்பா கவனிக்கறாங்களாம்'' என சரவெடியாய் பேச்சை துவக்கினாள்.

''தாராபுரத்துல இருக்கிற ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிங்க, ஊராட்சி செயலர்களை வரவழைச்சு 'ஜாயின்ட் சிட்டிங்குங்கற பேர்ல, தீபாவளி வசூல் அள்றாங்கன்னு, லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் போயிருக்கு. அங்க போய் விசாரணையை துவக்கினப்போ, சினிமாவுல வர்ற மாதிரி எங்கிருந்தோ, போன் கால் வந்துருக்கு; விசாரணையை பாதியில விட்டுட்டு, லஞ்ச ஒழிப்பு போலீஸ் அப்படியே கிளம்பீட்டாங்களாம்.

''இதே மாதிரிதான், அவிநாசி தாலுகா அலுவலகத்துக்கும், போன வாரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் போயிருக்காங்க. ஆனா, வசூல் விவகாரம் இல்லையாம். ஒரு வி.ஏ.ஓ., மேல, ஒருத்தர் கொடுத்த லஞ்சப்புகாரை விசாரிக்கத்தான் போனாங்களாம். அந்த நபர், தன்னோட நிலத்துல இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் கொடுத்திருக்காரு. அந்த இடத்தை ஆய்வு பண்ண போன கிராம அதிகாரி, நிலம் தொடர்பா அவர் பேர்ல இருக்கிற சில ஆவணங்களை கேட்டிருக்காங்க. அவரு ஆவணங்களை கொடுக்காததால, இலவச மின்சாரத்துக்கு பரிந்துரை பண்ண முடியாதுன்னு, கிராம அதிகாரி சொல்லிட்டாங்களாம். அந்தக் கோபத்துல தான் நில உரிமையாளரு, அந்த அலுவலரை சிக்க வைக்க, லஞ்ச ஒழிப்பு போலீஸ் வரைக்கும் போயிட்டாருன்னு பேசிக்கிறாங்க.

''ஆமாங்க்கா. கூட்டு பட்டா நிலத்துல, சிட்டாவுல பேர் இல்லாதவங்க, வசதி, வாய்ப்புடன் இருக்கிற விவசாயிங்க கூட, அடுத்த தலைமுறைக்கு உதவணும்கற மனநிலையில, இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கிறாங்களாம். அதனால, எந்தவொரு பாரபட்சமும் பார்க்காம, தகுதியானவங்கள மட்டும் தேர்வு பண்ணுங்கன்னு, அதிகாரிகளுக்கு மேலிட உத்தரவாம்,'' என, நிலவரத்தை விளக்கினாள் மித்ரா.


கூட்டணி தர்மம்



''கொள்கையையும் விட்டுக்கொடுக்க முடியாம, கூட்டணி தர்மத்தையும் காப்பாத்த முடியாம, 'தோழர்'கள் ரொம்ப சங்கடப்படறாங்க...

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு, 10 சதவீத போனஸ் அறிவிச்சதுக்கு கண்டனம் தெரிவிச்சு ஆர்ப்பாட்டம் நடத்த, 'காம்ரேடு' தொழிற்சங்கத்தினர், தேதி குறிச்சாங்க. ஆனா, அவங்க அந்த நாள்ல ஆர்ப்பாட்டம் பண்ணல.

''ஆர்ப்பாட்டம் பண்ணுனா அன்னிக்கு'ஆப்சென்ட்' போட்டுடுவோம்ன்னு, அதிகாரிங்க சொன்னதால தான், ஆர்ப்பாட்டம் நடத்தலையாம். கூட்டணியில இருந்துக்கிட்டு அரசாங்கத்தை எதிர்த்தா, சரியா வராதுன்னு தான் ஆர்ப்பாட்டம் நடத்தாம ஒதுங்கிட்டாங்கன்னு, தொழிற்சங்கத்தினர் பேசிக்கிறாங்க,'' என்று 'அரசியல்' பேசினாள் சித்ரா.

''நமுத்துப் போன பட்டாசு மாதிரி ஆயிடுச்சா'' என, சிரித்தாள் சித்ரா.

''இதே மாதிரிதான் மித்து. வாவிபாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில அழுகிய முட்டை வினியோகம் பண்றதா, 'தோழர்' ஒருவர், கலெக்டர்கிட்ட புகார் கொடுக்க, பிரச்னை பெரிசாயிடுச்சு. சத்துணவு அமைப்பாளரை 'சஸ்பெண்ட்' பண்ற அளவுக்கு நிலவரம், கலவரம் ஆயிடுச்சு.

ஆளும் கட்சி நிர்வாகிங்க அந்த 'தோழரை' கூப்பிட்டு, கூட்டணியில இருந்துட்டு, அரசாங்கத்துக்கு கெட்ட பேரு வாங்கித்தர்ற மாதிரி நடந்துக்றீங்களேன்னு புலம்பியிருக்காங்க,'' என்று, சுவாரசியத்துடன் விவரித்தாள் சித்ரா.

''ஆமாங்க்கா. பக்கத்து வீட்ல இருக்கிற 'மணி' அண்ணன் கூட, இந்த விஷயத்தை பத்தி என்கிட்ட பேசினாரு'' என்றாள் மித்ரா.


தலையாட்டி பொம்மைகள்



''பல்லடத்துல ஆளுங்கட்சிக்காரங்க தலையீடு ரொம்ப அதிகமாயிடுச்சுன்னு பேசிக்கிறாங்க. அமைச்சர், எம்.எல்.ஏ.,ன்னு யாரும் இல்லாமகூட ஆளும் கட்சி நிர்வாகிங்க, மருத்துவ முகாம் போன்ற அரசு நிகழ்ச்சிகளை நடத்தி முடிச்சிடறாங்களாம். தேர்தலுக்கு முன்னாடியே, நகராட்சியை மொத்தமா குத்தகைக்கு எடுத்துக்கிட்டாங்களாம். நகராட்சி ஊழியர்கள தலையாட்டி பொம்மைகளா மாத்திட்டும் வர்றாங்களாம்.இதையெல்லாம் கட்சித்தலைமை கவனிக்கலைன்னா, வர்ற நகராட்சி தேர்தல்ல, ஓட்டு குறைஞ்சுடும்ன்னு, நடுநிலைவாதிங்க பேசிக்கிறாங்க. அப்படி எதுவும் ஆச்சுன்னா, அதுக்கு, 'ராஜேந்திரா அண்ட் கோ' தான் பொறுப்புன்னும் சொல்றாங்களாம்,'' என்று 'குண்டு' துாக்கிப்போட்டாள் மித்ரா.


'ஜூட்' விட்ட கும்பல்'



'மண், மணல் எடுக்கிற இடத்துக்கு போய், மிரட்டி பணம் பண்ற கும்பல், ஊதியூர் பக்கம் போயிருக்காங்க. தன்னோட தோட்டத்துல இருந்து மண் எடுத்து, சமன்படுத்தற வேலைய செஞ்சிட்டிருந்த இருந்த விவசாயிகிட்ட போய், 'நீங்க அனுமதியில்லாம மண் எடுக்கிறீங்க'ன்னு, மிரட்டி, பணம் பறிக்க முயற்சி பண்ணியிருக்காங்க. இது தெரிஞ்சு அக்கம்பக்கம் இருக்கிற விவசாயிங்க ஒண்ணுகூடிய விவகாரம் போலீஸ் வரைக்கும் போயிருக்கு. போலீஸ்காரங்க வந்து, அந்தக் கும்பலை கூட்டிட்டு போயிருக்காங்க. வகையா சிக்கிட்டோம்ன்னு பயந்து, 'சும்மா ஊரை சுத்திப்பாக்கத்தான் வந்தோம்'னு சொல்லி அந்த கும்பல் சமாளிச்சுட்டாங்களாம். எல்லாம் அந்த 'ராமச்சந்திர மூர்த்தி'க்கே வெளிச்சம்,'' என நொந்து கொண்டாள் சித்ரா.


மயானத்துக்கு பட்டா



''வடக்கு அவிநாசிபாளையத்துல, சிலருக்கு வருவாய்த்துறை மூலமா பட்டா கொடுத்திருக்காங்க. ஆனா, இடத்தை ஒப் படைக்கலையாம். இதுதொடர்பா, பயனாளிங்க புகார் கொடுக்க,ஆர்.டி.ஓ., போய் நேர்ல இடத்தை பார்த்திருக்காரு. பட்டா கொடுத்த இடத்துல, பஞ்சாயத்தோட மயானம் இருந்திருக்கு. அப்படியே 'ஷாக்' ஆன அதிகாரி, மயானம் இருக்கறது கூட தெரியாம, எப்படி பட்டா கொடுத்தீங்கன்னு, அலுவலர்களுக்கு செம 'டோஸ்' விட்ருக்காரு. அந்த பஞ்சாயத்துல, 10 வருஷமா, புறம்போக்கு நிலம் தொடர்பான விவரத்தை, 'அப்டேட்' செய்யாம இருந்ததுதான், இத்தனை குழப்பத்துக்கும் காரணமாம்,'' என்று உண்மையை அம்பலப்படுத்தினாள் மித்ரா.


நகராமலே 'லைசென்ஸ்'



''சின்ன பசங்க நிறைய பேரு ரொம்ப வேகமா வண்டி ஓட்டறாங்க. சாலை விதியை மதிக்கிறதே இல்லை. வண்டியை சரியா ஓட்ட தெரியாம, டிரைவிங் ஸ்கூல் உதவியோட, லைசென்ஸ் வாங்கிக்கிறாங்க. சரியா வண்டி ஓட்டறாங்களா... சாலை விதியை சரியா தெரிஞ்சு வைச்சிருக்காங்களான்னு, அவங்கள வண்டியை ஓட்ட வைச்சு, பக்கத்துல உட்கார்ந்து பார்த்து, அதுக்கு அப்புறம் தான், லைசென்ஸ் கொடுக்கணும். ஆனா, அந்த அதிகாரி, 'சீட்'டில் இருந்து எழுந்திருக்கிறதே இல்லையாம். அலுவலகத்தை ஒட்டி இருக்கிற மைதானத்துல, வண்டியை ஓட்டி காண்பிக்க வச்சு, லைசென்சுக்கு, கையெழுத்து போட்டு கொடுத்துடறாராம்,'' என வெடித்தாள் சித்ரா.

''அங்க மட்டுமில்லக்கா... பல இடங்கள்ல அப்படித்தான் நடக்குது. 'வேலு' அண்ணன் கூட கார் ஓட்டத் தெரியாம லைசென்ஸ் வாங்கிட்டேன்னு பெருமையா சொன்னாரு,'' என்ற மித்ரா,

''எந்தவொரு துறைக்கும் நல்ல ஆபீசர் இருக்கணும். அப்பதான், இந்த மாதிரி பிரச்னையெல்லாம் வராது. திருப்பூர்ல இருக்கிற, மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடம், நாலு மாசமா காலியா இருக்கு. கோவையில இருக்கிற அதிகாரிதான், கூடுதல் பொறுப்பா கவனிச்சுக்கிறார். இதனால, கேலோ இந்தியா, தேசிய விளையாட்டு போட்டி வீரர் தேர்வுக்கான தகவல் ரொம்ப தாமதமா தெரிஞ்சிருக்கு. போட்டியில கலந்துக்க ஆசையா இருந்தவங்க ஏமாந்துட்டாங்க,'' என்று ஆதங்கப்பட்டாள்.

''செய்ற வேலையில கொஞ்மாவது ஈடுபாடு வேண்டாமா,'' என, 'உச்' கொட்டிய மித்ரா, ''வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு வந்து போற மக்கள் அலையக் கூடாதுன்னு தான், அலுவலக சுவத்துல, அந்தந்த வி.ஏ.ஓ.,க்களின் மொபைல் எண் எழுதி வைக்கணும்னு கலெக்டர் உத்தரவு போட்டிருக்காரு. ஆனா, 'நெருப்பு எரியற' ஊரு வி.ஏ.ஓ.,வோட 'மொபைல் எண்' பல நேரங்கள்ல, 'சுவிட்ச் ஆப்'ன்னு வருதாம்,'' என்று தகவலைப் பகிர்ந்தாள்.


வசூல் ராஜாக்கள்…



''சிட்டி' போலீஸ்ல, 'டிரான்ஸ்பர்' உத்தரவு வந்தும், நிறைய போலீஸ்காரங்க, பழைய இடத்துலேயே இருக்காங்களாம்,'' என 'போலீஸ் மேட்டார்' பேச துவங்கினாள் சித்ரா.

''தீபாவளி வருதுல்ல ஒரு ரவுண்டு கலெக்ஷன் முடிச்சுட்டுதான் கிளம்புவாங்க போல'' என சிரித்த மித்ரா, ''சிட்டி'யில வேல பாக்குற 'டிராபிக்' போலீஸ்காரங்க, 'கூகுள் பே' மூலமா, கலெக்ஷன் அள்றாங்கன்னு, போன வாரம் பேசினோம்ல. அந்த மாதிரி, குமார் நகர் சிக்னல் பக்கத்துல நடந்த ஒரு சம்பவம், கமிஷனர் ஆபீஸ் வரைக்கும் போயிருக்கு. அதிகாரிகளும், அந்த போலீஸ்காரங்கள கூப்பிட்டு விசாரிச்சிருக்காங்க. 'கூகுள் பே' விவகாரம் உண்மைன்னு கண்டுபிடிச்சுட்டாங்க. ஆனா, எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம்,'' என்று 'பொடி' வைத்தாள்.

''ஒரு வேளை தீபாவளி முடிஞ்சத்துக்கு அப்புறம், நடவடிக்கை எடுப்பாங்களோ, என்னவோ' என, 'கணித்த' மித்ரா, ''திருப்பூர் மாநகராட்சியில தெரு விளக்கு பராமரிப்பு, குடிநீர் மோட்டார் பராமரிப்புன்னு மக்கள் புகார் சொன்னா, ஊழியர்கள் அந்த இடத்துக்கு போறாங்க.

'எங்ககிட்ட பழுது நீக்கம் செய்றதுக்கான 'டூல்ஸ்' இருக்கு; ஆனா, பழுது சரிபண்றதுக்கு தேவையான 'ஸ்பேர்ஸ்' தான் இல்ல; வாங்கிக் கொடுத்தீங்கன்னா சரி பண்ணி தர்றோம்ன்னு சொல்றாங்களாம்,'' என்றாள்.

''அந்தளவுக்கு, மாநகராட்சியில பட்ஜெட் பற்றாக்குறை போல'' என நொந்துகொண்டாள் சித்ரா.


இனிப்பான விஷயம்



''ஒரு ஸ்வீட்டான விஷயம் சொல்றேன். தீபாவளின்னாலே, கலெக்டர்கிட்ட பெரிய ஸ்வீட் பாக்ஸ் எல்லாம் கொடுத்து, பெரிய புள்ளிகள் வந்து வாழ்த்து சொல்லிட்டுப் போவாங்க... இந்த மாதிரி யாரும் வரக்கூடாதுன்னு, இப்ப இருக்கற கலெக்டர் கண்டிப்பா சொல்லீட்டாராம்... ஸ்வீட் வாங்காதது 'ஸ்வீட்'டான விஷயம்தானே... சரிக்கா, நானும் தீபாவளி 'ஸ்வீட்' செய்யணும்'' என்று கூறிய மித்ரா வீட்டுக்குப் புறப்பட்டாள்.

''கடையிலதான வாங்கப்போற... 'ஸ்வீட்' செய்யப்போறேன்னு எங்கிட்டயேவாகதை விடுற'' என்று கலகலத்தாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X