வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் ரத்து: 10.5 சதவீதம் தர பிறப்பித்த அரசாணை செல்லாது

Updated : நவ 02, 2021 | Added : நவ 01, 2021 | கருத்துகள் (30) | |
Advertisement
சென்னை :வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில், 10.5 சதவீதம் தர பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லுாரிகளில் வழங்கிய உள்ஒதுக்கீடு அடிப்படையிலான சேர்க்கைகளும் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும்
 வன்னியர்கள், இடஒதுக்கீடு, சட்டம்,  ரத்து,

சென்னை :வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில், 10.5 சதவீதம் தர பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லுாரிகளில் வழங்கிய உள்ஒதுக்கீடு அடிப்படையிலான சேர்க்கைகளும் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த உத்தரவை எதிர்த்து
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னிய சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி, 2021 பிப்ரவரியில் சட்டம் இயற்றப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வி.வி.சாமிநாதன் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.184 பக்கங்கள்


தங்கள் தரப்பை கேட்கக்கோரி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க., சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களை, நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் விஜயன், ராஜகோபாலன், பாலசுப்ரமணியம், வழக்கறிஞர் மகாராஜா உள்ளிட்டோர் ஆஜராகினர்.


நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அடங்கிய அமர்வு, 184 பக்கங்கள் அடங்கிய விரிவான உத்தரவை பிறப்பித்தது.

அதன் விபரம்: வன்னிய சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா; ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? மக்கள் தொகை, சமூக கல்வி அந்தஸ்து, பணிகளில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் குறித்த புள்ளிவிபரங்கள் இல்லாமல், இடஒதுக்கீடு வழங்க முடியுமா?போதிய புள்ளிவிபரங்கள் இன்றி, வன்னிய சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய சட்டம், அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளை மீறுவதாக ஆகாதா உள்ளிட்ட அம்சங்கள், இந்த வழக்கில் பரிசீலிக்கப்பட்டன.இடஒதுக்கீடு தொடர்பாக, ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டத்தில், திருத்தம் வரும் வரை, அது தொடர்ந்து அமலில் இருக்கும்.


சட்டத்துக்கு எதிரானதுஇந்தச் சட்டத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்ட 20 சதவீதம் அமலில் இருக்கும் போது, அதில் திருத்தம் கொண்டு வராமல், வன்னிய சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதனால், உள்ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்ற சட்டசபைக்கு அதிகாரம் இல்லை. இந்தச் சட்டம், ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை வழங்குகிறது. வன்னியகுல சத்ரியர் என்ற ஜாதியின் கீழ், வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர், படையாச்சி, பாலி, அக்னிகுல சத்ரியா ஆகியவற்றை தனிப் பிரிவாக கருதியுள்ளனர். அவ்வாறு செய்ததன் வாயிலாக, ஒரு ஜாதிக்கும், 115 இதர ஜாதியினருக்கும் இடையே பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.சட்டத்தின் வாயிலாக, ஒரு ஜாதிக்கு அதிக அளவில் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. வன்னிய சமூகத்தினர் போல, மற்ற 115 சமூகத்தினருக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.


புள்ளி விபரங்கள் இல்லை


இந்திரா சஹானி வழக்கில், 'ஜாதியை மட்டுமே வைத்து இடஒதுக்கீடு வழங்க முடியாது' என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. எனவே, இந்தச் சட்டத்தை ஏற்க முடியாது.மக்கள் தொகையில் சமூக, கல்வி, பொருளாதார, அரசியல் காரணிகள் தொடர்பான புள்ளி விபரங்களை சேகரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இன்னும் அந்த கமிஷன், அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

சட்டம் இயற்றும் வரை அறிக்கை தாக்கல் செய்யாததால், அப்போது போதிய புள்ளி விபரங்கள் இல்லை என்பது தெளிவாகிறது. பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் தலைவர் அளித்த குறிப்புகளின் அடிப்படையில், தமிழக அரசு சட்டம் இயற்றி உள்ளது. சட்டம் இயற்றுவதற்கு முன், கமிஷனில் உள்ள மற்ற உறுப்பினர்களின் கருத்துகள், அரசின் பரிசீலனைக்கு சமர்பிக்கப்படவில்லை.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மொத்தமாக 20 சதவீத ஒதுக்கீட்டை அனுபவிக்கும் போது, ஏழு பிரிவினர் அடங்கிய வன்னிய ஜாதியினருக்கு மட்டுமே 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கியிருப்பது, இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான வாய்ப்பை பாதிக்கும்.

வன்னியருக்கு 10.5 சதவீதம் ஒதுக்கப்பட்டால், மீதி உள்ள 115 ஜாதியினர் 9.5 சதவீதத்தை பங்கிட்டு கொள்ள வேண்டும்.

ஜாதி வாரியான மக்கள் தொகையை, அரசு பரிசீலிக்கவில்லை; உள்ஒதுக்கீடு வழங்க அரசிடம் புள்ளிவிபரங்கள் இல்லை. சட்டத்தால் பாதிக்கக்கூடிய சமூகத்தினருடன், அரசு விவாதித்தது என்பதை காட்டுவதற்கு எந்த ஆவணமும் இல்லை. புள்ளிவிபரங்களை திரட்டுவதற்காக கமிஷன் அமைத்து, இரண்டு மாதங்களில் சட்டம் இயற்றப்பட்டு விட்டது. சட்டம் இயற்றப்படுவதற்கு முன், புள்ளிவிபரங்களை சேகரித்து விட்டதாக அரசு வழக்கு இல்லை.
முஸ்லிம் மற்றும் அருந்ததியினருக்கான ஒதுக்கீட்டை பொறுத்தவரை, அவர்களின் மக்கள் தொகை, போதிய பிரதிநிதித்துவம் இல்லாமை பற்றி ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கை அளிக்கப்பட்டது.

வன்னியர்களை விட 115 ஜாதியினர் எவரும் முன்னேறி உள்ளனர் என்பதை உறுதி செய்ய, எந்த ஆவணமும் இல்லை. அதனால், வன்னியரை பிரித்து இடஒதுக்கீடு வழங்குவதில், எந்த அடிப்படையும் இல்லை. எனவே, அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையிலான இந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்த பின், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர், இடஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனங்கள், வகுப்புகளில் சேர்க்கை நடந்துள்ளதால், நான்கு வாரங்களுக்கு தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரினர்.

அவர்களின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. நியமனங்கள், மாணவர்கள் சேர்க்கை, வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என, ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

மேல்முறையீடு
தமிழக அரசு சார்பில், இவ்வழக்கில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், ''உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்படும். இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்ந்த மாணவர்களின் நிலை பற்றி, உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைப்போம்,'' என்றார்.

மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, ''உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். மாணவர்கள் சார்பிலும் மேல்முறையீடு செய்வோம்,'' என்றார்.

மாணவர் சேர்க்கை ரத்தாகுமா?


வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு செல்லாது என்று கூறி, அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த, 8,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.சட்டம், வேளாண்மை, மீன்வளம் என, அனைத்து வகை படிப்புகளிலும் சேர்ந்துள்ள வன்னியர் ஒதுக்கீட்டு மாணவர்கள் படிப்பை தொடர முடியுமா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.
அதேபோல, அரசின் பல்வேறு துறைகளில் வன்னியர் இட ஒதுக்கீட்டில், ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு ரத்தானால், வன்னியர் அல்லாத பிரிவினருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புஏற்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்தாலும், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கை மட்டும் அங்கீகரிக்கப்பட்டு, இனி நடக்க உள்ள மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடுரத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு முறையான புள்ளிவிபரங்கள் இன்றி, அரசியல் ரீதியாக முடிவெடுத்ததால், இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களின் சமூக, கல்வி மேம்பாட்டிற்காக, போராடி பெறப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வர் ஸ்டாலினுக்கு உண்டு. அதை அவர் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.உள் இடஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட, அனைத்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும், அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
ஓட்டுக்காக மோசடி


வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது குறித்து, 'சம்பந்தப்பட்டவர்கள் பதில் என்ன?' என்று கமல் கேள்வி எழுப்பிஉள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:'வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு, தேர்தல் கால மோசடி நாடகம்' என மக்கள் நீதி மய்யம் அப்போதே கண்டித்தது. இன்று அந்த சட்டத்தை கடுமையான விமர்சனங்களுடன், நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மோசடியை அரங்கேற்றி ஓட்டுகளை அறுவடை செய்தவர்களின் பதில் என்ன?இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


கூட்டமைப்பு வரவேற்பு


''வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது வரவேற்கத்தக்கது,'' என சமூக நீதி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராமசாமி கூறினார்.

அவர் கூறியதாவது:வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை, உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது, சமூக நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி; அதை நாங்கள் வரவேற்கிறோம். அனைத்து சமூகத்திற்கும் முறையான ஜாதி வாரி கணக்கெடுப்பு மூலம், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். எந்த சமூகத்திற்கும், நாங்கள் எதிரானவர்களோ, அவர்களது உரிமைகளை பறிப்பதோ, எங்களது நோக்கம் இல்லை. முறையான ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
02-நவ-202123:22:17 IST Report Abuse
NicoleThomson vedhanaikkuriya theerppu
Rate this:
Cancel
Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா
02-நவ-202123:17:11 IST Report Abuse
Velayutharaja Raja சரியான தீர்ப்பு. வரவேற்கிறேன்
Rate this:
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
02-நவ-202120:09:28 IST Report Abuse
ராம.ராசு இந்த ஒதுக்கீட்டிற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது, திமுக கொண்டுவந்த எஸ்.சி பட்டியலிலிருந்து அருந்ததியர்களை உள் ஒதுக்கீடுதான். இதைத் தவிர்த்து இருந்திருக்கலாம். ஒரு பட்டியலில் இருப்பவர்களில் வாய்ப்புக் கிடைக்காத சமூகத்தைக் கண்டறிந்து, ஸ்பெஷல் டிரைவ் மூலமாக அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து சரி செய்து இருக்க முடியும். கிட்டத்தட்ட 76 பிரிவுகள் SC பட்டியலில் உள்ளன. அதில் பள்ளர், பறையர், அருந்ததியர் 93.5% ஆக உள்ளார்கள். அரசுத் துறைகளில் பெரும்பாலும் பள்ளர், பறையர் சமூகமே அதிகமாக உள்ளார்கள் என்பதாக, அருந்ததியர்களுக்கான வாய்ப்பு குறைவு என்ற நோக்கத்தில் அரசு உள் ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து இருக்கலாம். அப்படிப்பார்த்தால் 6.5% மக்களுக்கான வாய்ப்பு இல்லாமல்தான் இருக்கிறது. அவர்களுக்கான வாய்ப்புக்களை கேட்பதற்கு எந்த அரசியல் கட்சியும் முன்வருவது இல்லை. அவர்கள் ஒற்றுமையாக கேட்டுப் பெறுவதற்கும் யாரும் இல்லை. அரசு நினைத்தால் எந்தெந்த சமூகம் அரசுத் துறையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ந்து அதன் அடிப்படையில், வாய்ப்புக்கு கிடைக்காதவர்களுக்கு கொடுத்த இருக்க முடியும். ஆனால் அப்போதைய அரசு கொண்டுவந்த உள் ஒதுக்கீடு முறையால் மற்ற சமூகத்தினரும் தனித்தனியாக கேட்கும் நிலையை உருவாக்கிவிட்டது. ஒவ்வொரு பட்டியல் பிரிவுகளிலும் இருப்பவர்களுக்கு இடையே போட்டியும், மனக்கசப்பும் உருவாகும் நிலை ஏற்பட்டுவிட்டது. அப்படியான நிலை மேலும் உருவாகாமல் இருக்க உள் ஒதுக்கீடு என்று இல்லாமல், ஒவ்வொரு பட்டியலிலும் இருக்கும் அனைத்து சமூகத்திற்கும் வாய்ப்புக் கிடைக்கும்படியான முறையை ஏற்படுத்த வேண்டும். அதற்க்கு ஆட்சி அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு செயல்படும் அரசியல் தலைமை இருக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X