ஒளிரும் பட்டையில் தொடரும் கொள்ளை!| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

ஒளிரும் பட்டையில் தொடரும் கொள்ளை!

Updated : நவ 02, 2021 | Added : நவ 01, 2021 | கருத்துகள் (5) | |
கன ரக வாகனங்கள் இரவு நேரத்தில் விபத்தில் சிக்காமல் இருப்பதற்காக, லாரி உரிமையாளர்களுக்கு மத்திய அரசு பல யோசனைகளை தெரிவித்து, அதை கட்டாயம் பின்பற்ற வலியுறுத்தியது. அதில் முக்கியமானது, கன ரக வாகனங்களை சுற்றிலும் ஒளிரும் பட்டைகளை ஒட்ட வேண்டும் என்பது. குற்றச்சாட்டுஇந்த ஒளிரும் பட்டைகளை, எந்த நிறுவனத்திடமும் வாங்கலாம். ஆனால், கன ரக வாகனங்கள் இறுதிச் சான்றிதழ்
ஒளிரும் பட்டை,கொள்ளை!

கன ரக வாகனங்கள் இரவு நேரத்தில் விபத்தில் சிக்காமல் இருப்பதற்காக, லாரி உரிமையாளர்களுக்கு மத்திய அரசு பல யோசனைகளை தெரிவித்து, அதை கட்டாயம் பின்பற்ற வலியுறுத்தியது. அதில் முக்கியமானது, கன ரக வாகனங்களை சுற்றிலும் ஒளிரும் பட்டைகளை ஒட்ட வேண்டும் என்பது.


குற்றச்சாட்டுஇந்த ஒளிரும் பட்டைகளை, எந்த நிறுவனத்திடமும் வாங்கலாம். ஆனால், கன ரக வாகனங்கள் இறுதிச் சான்றிதழ் பெற, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செல்லும் போது, கட்டாயம் ஒளிரும் பட்டைகள் ஒட்டியிருக்க வேண்டும் என, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை வைத்து, தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பணம் பார்ப்பதாக, லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து, தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தன்ராஜ் கூறியதாவது:மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கும் நடைமுறை அருமையானது; வரவேற்கத்தக்கது. கன ரக வாகனங்கள், ஒளிரும் பட்டை ஒட்டி தான் செல்ல வேண்டும் என்ற உத்தரவுக்கு பின், எல்லாரும் தவறாமல் செய்கின்றனர். இதனால், விபத்துகள் குறைந்திருக்கின்றன. ஆனால், இந்த ஒளிரும் பட்டைகளை, குறிப்பிட்ட இரு நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என, தமிழக வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கன ரக வாகனங்கள் அளவுக்கு ஏற்ப, ஒளிரும் பட்டைகள் நீளம் இருக்கும். சாதாரண லாரி என்றால், 15 மீட்டர் அளவுக்கு ஒளிரும் பட்டை தேவைப்படும். இதன் மார்க்கெட் விலை 750 ரூபாய். மற்ற பெரிய வாகனங்களுக்கு அளவுக்கு ஏற்ப விலை மாறுபடும்.

ஆனால், குறிப்பிட்ட இரு நிறுவனங்கள் 750 ரூபாய்க்கு பதிலாக 3,500 ரூபாய் வாங்குகின்றன. இதில், அதிகாரிகள், அமைச்சர் வரை பங்கு போகிறது. கடந்த ஆட்சி காலத்தில் தான், இந்த பெரும் கொள்ளை நடந்தது. லாரிகள், டிப்பர் லாரி, 'டெம்போ'க்கள், சிறு போக்குவரத்து வாகனங்கள், 11 லட்சம் சரக்கு வாகனங்கள் தமிழகத்தில் உள்ளன.


அவை ஒவ்வொன்றும் இறுதிச் சான்று வாங்குவதற்கு முன், ஒவ்வொரு முறையும் ஒளிரும் பட்டைகள் ஒட்ட வேண்டும் என்றால், அந்த இரு நிறுவனங்கள் எவ்வளவு ரூபாய் கூடுதலாக வசூலிக்கின்றன என்பதை, கணக்குப் போட்டு கொள்ளுங்கள். குறிப்பிட்ட இரு தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒளிரும் பட்டைகளை வாங்குவதோடு, அந்த நிறுவனமே, குறிப்பிட்ட வாகனத்தில் ஒளிரும் பட்டைகள் ஒட்டப்பட்டுள்ளன என சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையையும் ஏற்படுத்தி உள்ளனர்.


இந்த நடைமுறைக்கு எதிராக, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் மற்றும் தென்னிந்திய மோட்டார் காங்கிரஸ் வாயிலாக, மத்திய அரசிடம் முறையிட்டோம். அவர்களும், இந்த கூட்டுக் கொள்ளையை உணர்ந்து, 'மத்திய சாலை போக்குவரத்துத் துறை அனுமதித்த 10 நிறுவனங்களிடம் வாங்கலாம். ஒளிரும் பட்டை வாங்கியதற்கான ரசீதை மட்டும், இறுதிச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் இணைத்தால் போதும்' என்று புதிய உத்தரவு போட்டனர்.


பழைய நடைமுறைஇதை பிற மாநில அரசுகளின் போக்குவரத்துத் துறைகள் பின்பற்றுகின்றன. தமிழகத்திலும் அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தமிழக போக்குவரத்து துறை ஆணையருக்கு கீழே இருக்கும் ஓர் அதிகாரி, 'யாரைக் கேட்டு, பழைய நடைமுறையை மாற்றினீர்கள்' என்று கொந்தளிக்கிறார்.


எனவே, பழையபடியே இரு நிறுவனங்களிடம் இருந்தே ஒளிரும் பட்டைகளும், சான்றும் பெற வேண்டியதாகி விட்டது. கடந்த ஆட்சிக் காலத்தில் அடித்த இந்த கொள்ளை குறித்து, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினிடம் பேசினோம். அவரும், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசு உத்தரவை பின்பற்றி, லாரி உரிமையாளர்களுக்கு உதவிடுவோம்' என்றார்.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்து, ஆறு மாதங்களாக போகிறது. இன்றளவிலும் பழைய நிலையே தொடருகிறது. அன்றைக்கு இருந்த அமைச்சர் போய், வேறொருவர் வந்திருக்கிறார். அவ்வளவு தான். ஆனால், அதே கொள்ளை தொடருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


'பொறுமையாக இருக்கணும்!'-ஒளிரும் பட்டைகள் ஒட்டப்பட்டால் தான், கன ரக சரக்கு வாகனங்களுக்கு இறுதிச் சான்று அளிக்கப்படும் என்ற நடைமுறை இருக்கிறது. மத்திய அரசின் புதிய உத்தரவு வந்து விட்டது. ஆனாலும், துறை அமைச்சரின் வழிகாட்டல்படி தான், அதிகாரிகள் புது உத்தரவு போட முடியும். லாரி உரிமையாளர்களின் கோரிக்கையையும், மத்திய அரசின் உத்தரவையும் அமைச்சரிடம் எடுத்துக் கூறி, அவரது வழிகாட்டலில், அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவெடுப்போம். லாரி உரிமையாளர்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்தால், நல்லது நடக்கும்.

- தமிழக போக்குவரத்து துறை அதிகாரி

- நமது நிருபர் -


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X