கோயம்பேடு -கோயம்பேடு மேம்பாலத்தை திறக்க, முதல்வர் ஸ்டாலின் நேற்று, கோயம்பேடு வந்ததையடுத்து, கோயம்பேடு பஸ் நிலையம், ஓடுதளம் ஆகிய பகுதிகளில் சுற்றிய தெரு நாய்களை, சென்னை மாநகராட்சியினர் நேற்று முன்தினம் பிடித்துச் சென்றனர்.மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சிகள் முடிந்த பின், இருசக்கர வாகனத்தில் ஒரு பக்கெட்டில் உணவுடன், போலீஸ் எஸ்.ஐ., ஒருவர் வந்து, அப்பகுதியில் உள்ள நாய்களை தேடினார். பின், நாய்கள் பிடித்துச் செல்லப்பட்டது தெரிந்ததும், மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தார். பின் அதிகாரிகளிடம் பேசி, பிடித்துச் சென்ற நாய்களை மீண்டும் கொண்டு வந்து விடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.இது குறித்து அவர் கூறுகையில்,'இங்குள்ள நாய்களுக்கு, 3 ஆண்டுகளாக உணவளித்து வருகிறேன். வேறு பகுதியில் விட்டால், அங்குள்ள நாய்கள் கடித்துக் குதறி விடும். ஆகையால் இங்கிருந்த நாய்களை, இதே இடத்தில் திருப்பி விடுமாறு கேட்டுள்ளேன்' என்றார்.இந்நிகழ்வை புகைப்படம் எடுக்க அவர் அனுமதிக்கவில்லை.