புதுடில்லி : நம் ராணுவத்தின் துரிதமான தாக்குதல் திறனை மதிப்பிட, கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதியில் வான்வழி பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியா - சீனா இடையே நிலவி வரும் மோதல் போக்கை அடுத்து, கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரும் 50 -- 60 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளனர். இந்நிலையில் நம் ராணுவத்தினரின் துரிதமான தாக்குதல் திறனை மதிப்பிட வான்வழி பயிற்சிகள் நடத்த திட்டமிடப்பட்டது.

கிழக்கு லடாக்கின் எல்லை பகுதியில் இந்த பயிற்சிகள் நேற்று துவங்கி தொடர்ந்து நடந்து வருகின்றன. ராணுவத்தின் ஷத்ருஜீத் படைப்பிரிவு இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. பயிற்சியின் ஒரு பகுதியாக போர் விமானத்தில் வந்த வீரர்கள் 14 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் இறக்கிவிடப்பட்டனர்.

குறிப்பிட்ட பகுதியில் அவர்கள் துல்லியமாக இறங்கி, மீண்டும் குழுவாக இணைந்து, தங்களுக்கு அளிக்கப்பட்ட போர் பணியை துரிதமாக செய்கின்றனரா என்பது சோதிக்கப்பட்டது. மலை உச்சியில், 'மைனஸ் 20 டிகிரி செல்ஷியஸ்' குளிரில் சவாலான இலக்கை வீரர்கள் துடிப்புடன் செய்து முடித்தனர். நேற்று துவங்கிய இந்த பயிற்சி தொடர்ந்து நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE