சீனாவின் புதிய சட்டம் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்

Added : நவ 02, 2021
Share
Advertisement
ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுடன், 22 ஆயிரத்து 100 கி.மீ., துாரத்திற்கு சீனா எல்லைப் பகுதிகளை கொண்டுள்ளது. இதில், இந்திய - சீன எல்லைப் பகுதி மட்டும் 3,488 கி.மீ., நீளமானது. பூடான், இந்தியா தவிர்த்து, 12 நாடுகளுடன் சீனா எல்லை ஒப்பந்தங்களை செய்துள்ளது. பூடான், இந்தியா உடனான பிரச்னை மட்டும் நீடித்து வருகிறது. இந்நிலையில் தான், தங்கள் நாட்டு எல்லைகளின்
 சீனாவின் புதிய சட்டம் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்

ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுடன், 22 ஆயிரத்து 100 கி.மீ., துாரத்திற்கு சீனா எல்லைப் பகுதிகளை கொண்டுள்ளது. இதில், இந்திய - சீன எல்லைப் பகுதி மட்டும் 3,488 கி.மீ., நீளமானது.

பூடான், இந்தியா தவிர்த்து, 12 நாடுகளுடன் சீனா எல்லை ஒப்பந்தங்களை செய்துள்ளது. பூடான், இந்தியா உடனான பிரச்னை மட்டும் நீடித்து வருகிறது. இந்நிலையில் தான், தங்கள் நாட்டு எல்லைகளின் பாதுகாப்புக்காக, சீன அரசு சமீபத்தில் புதிய சட்டம் இயற்றி உள்ளது. அந்த சட்டம், அடுத்த ஆண்டு ஜனவரி 1ல் அமலுக்கு வருகிறது. அண்டை நாடுகள் உடனான எல்லைப் பகுதியில், பாதுகாப்பை ஒழுங்குபடுத்தவும், வலுப்படுத்தவும், சீன அரசின் புதிய சட்டம் வழிவகை செய்கிறது. அத்துடன், எல்லையைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சீன ராணுவத்திற்கு கூடுதல் அதிகாரமும் வழங்குகிறது.

எல்லை தாண்டுவோரை தடுக்கவும், அத்துமீறி எல்லைப் பகுதியில் ஊடுருவுவோருக்கு எதிராக தாக்குதல் நடத்தவும், சீன ராணுவத்திற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும், எல்லையை ஒட்டிய பகுதிகளில் புதிய நகரங்களை உருவாக்குவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சட்டத்தின் வாயிலாக உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, இந்தியாவை மறைமுகமாக அச்சுறுத்தும் செயலிலும் இறங்கியுள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. எனவே, புதிய சட்டம் வாயிலாக உருவாகும் பிரச்னைகளை எதிர்கொள்ள, இந்திய அரசும் முழு வீச்சில் தயாராக வேண்டும்.

கடந்த 2017ல் சிக்கிம் எல்லையில், இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் முச்சந்திப்பில், டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியாவும், சீனாவும் இங்கு படைகளை குவித்தன. இந்த பிரச்னைக்கு பின், இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் புதிதாக ராணுவ முகாம்கள், விமானப் படை தளங்கள் அமைத்தல் என, பல கட்டுமான பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

2020 மே மாதம், கிழக்கு லடாக் பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டதில், இந்திய தரப்பில் 20 வீரர்கள் பலியாகினர்; சீன தரப்பில் நிகழ்ந்த பலிகள் குறித்து தகவல் இல்லை. அப்போது முதல், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் சீராக இல்லை. பதற்றத்தை குறைக்க, இரு நாட்டு அதிகாரிகள் தரப்பில் பல கட்ட பேச்சு நடத்தியும் பலன் இல்லை; முடிவு எதுவும் இதுவரை எட்டப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில் தான், சீனா புதிய சட்டத்தை இயற்றி உள்ளது.

கம்யூனிச நாடான சீனா, முரண்பாடுகள் விரைவில் தீரும் வகையிலான செயல்களில் ஈடுபடாமல், தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான விவகாரங்களில் சுமுக தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் மங்கி வருகின்றன என்றே சொல்லலாம்.

அதற்கு மாறாக, அச்சுறுத்தல் மற்றும் படை பலம் வாயிலாக, இந்தியா உடனான பிரச்னையை தீர்க்க, சீனா முற்படுவதாகவே தெரிகிறது. சமீபத்தில் இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சில், எல்லையில் பதற்றத்தைக் குறைக்க, பல ஆக்கப்பூர்வமான யோசனைகள் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டும், அவற்றை ஏற்க சீன ராணுவ அதிகாரிகள் மறுத்து விட்டனர். அதனால் தான், பேச்சு தோல்வியில் முடிந்தது.

எனவே, சீன விவகாரத்தில், நாட்டின் இறையாண்மைக்கு எந்த பங்கமும் வராத வகையில், இந்தியா தன் அணுகுமுறையையும், வெளியுறவு கொள்கையையும் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும், இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில், 100க்கும் மேற்பட்ட ராக்கெட் லாஞ்சர்களை சீனா நிறுத்தி உள்ளதாகவும், சில பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை எல்லாம், சமாதான பேச்சு நடவடிக்கைகளில் சீனாவுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே வெளிப்படுத்துகின்றன.

அதனால், ராணுவ பலத்தை உயர்த்துவதுடன், உட்கட்டமைப்பு வசதிகளையும் மத்திய அரசு அதிகரிக்க வேண்டும். சீனா எந்த விதமான தாக்குதலை நடத்த முற்பட்டாலும், அதை உடனே முறியடிக்க வேண்டும். அதை நம் ராணுவம் செய்யும் என நம்புவோமாக.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X