புதுடில்லி: ‛‛கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ., தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் வருமானம் மட்டும்தான் உயர்ந்துள்ளது என்றும், சாமானிய மக்களின் வருமானம் உயரவில்லை,'' எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா கடந்த அக்.,31ம் தேதி பேசுகையில், ‛‛விலை உயர்வைப் பற்றி மக்கள் குறை கூறக்கூடாது. அனைத்து மக்களின் வருமானமும் உயர்ந்துள்ளது. சாமானிய மக்களின் வருமானம் உயராமல் இருக்கிறதா? அனைத்தையும் அரசால் இலவசமாக வழங்க முடியாது. வருமானம் உயரும்போது, மக்கள் விலைவாசி உயர்வையும் புரிந்துகொண்டு ஏற்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.6 ஆயிரம் ஊதியமாக பெற்றவர்கள் தற்போது ரூ.50 ஆயிரம் பெறுகின்றனர். அப்படியிருக்கையில் பெட்ரோல், டீசல் விலை மட்டும் பழைய விலையில் விற்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது,'' என பேசியிருந்தார்.

இந்நிலையில், மகேந்திர சிங் சிசோடியாவின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து கபில் சிபல் கூறியதாவது: பா.ஜ., கட்சியும் அதன் தலைவர்களும் நிதர்சன உலகில் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.6 ஆயிரம் ஊதியம் பெற்றவர், தற்போது அதிகமாக வாங்குவதாக மகேந்திர சிங் சிசோடியா கூறுகிறார். இது மிகச்சிறந்த நகைச்சுவை. பா.ஜ., தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் வருமானம் மட்டும்தான் உயர்ந்துள்ளது. சாமானிய மக்களின் வருமானம் உயரவில்லை.
பா.ஜ., அரசின் வீழ்ச்சி விரைவில் நடக்கும். உ.பி., சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோல்வியடையும் போது மத்தியில் ஆளும் பா.ஜ., அரசின் வீழ்ச்சியும் துவங்கும். பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், மத்திய அரசு, ஏழைகளை பற்றி சிந்திக்காமல் மத அரசியலை பற்றி சிந்திக்கிறது. பா.ஜ., ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE