சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக காங்., தலைவர் சோனியாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், தான் புதிதாக துவங்கியுள்ள கட்சிக்கு ‛பஞ்சாப் லோக் காங்கிரஸ்' எனப் பெயரிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ் ஜோத் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அம்மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகிய அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சி துவக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். இதற்கிடையே, காங்கிரசுடன் சமரச பேச்சு நடத்துவதாக வெளியான தகவலை முழுமையாக மறுத்த அமரீந்தர், ‛சமாதானத்திற்கான காலம் கடந்து விட்டது, காங்.,கில் இருந்து வெளியேறுவது நீண்ட சிந்தனைக்கு பிறகே எடுத்த முடிவு, அதுவே இறுதி முடிவு' என கூறியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை காங்., தலைவர் சோனியாவிற்கு அனுப்பினார் அமரீந்தர் சிங். அந்த கடிதத்தில், ‛ராகுல் மற்றும் பிரியங்காவால் ஆதரிக்கப்பட்ட சித்துவின் ஒரே எண்ணம், என்னையும் எனது அரசாங்கத்தை கலங்கப்படுத்துவது தான்,' எனக் குற்றச்சாட்டியுள்ளார். மேலும், தான் துவங்க உள்ள கட்சிக்கு ‛பஞ்சாப் லோக் காங்கிரஸ்' என்னும் பெயரை வைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.