டெக்சாஸ்: எலான் மஸ்க்கின் 2 சதவீத சொத்து உலக பட்டினியை போக்கும் என்று ஐ.நா., உலக உணவுத் திட்ட இயக்குனர் சி.என்.என்., செய்திச் சேனலுக்கு பேட்டி தர, 'என் 2 சதவீத சொத்து 600 கோடி டாலர், அதனை தருகிறேன் எப்படி பட்டினியை ஒழிப்பீர்கள்' என்று மஸ்க் கேட்க, செய்தி தவறாக வெளியாகியுள்ளது. 600 கோடி டாலரால் பட்டினியை ஒழிக்க முடியாது என அந்த அதிகாரி பதிலளித்துள்ளார்.
ஐ.நா., உலக உணவுத் திட்ட இயக்குனர் டேவிட் பீஸ்லே. இவர் சமீபத்தில் சி.என்.என்., செய்தி சேனலுக்கு பேட்டி தந்தார். அதில், எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மற்றும் பிற பில்லியனர்களின் 2 சதவீத சொத்துக்களை ஒருமுறை செலுத்தினால் உலகளாவிய பசியை தீர்க்க முடியும் என கூறியிருந்தார். அந்த செய்தியை டுவிட்டரில் பகிர்ந்த ஆய்வாளர் எலி டேவிட் என்பவர், எலான் மஸ்கின் 2 சதவீத சொத்து 600 கோடி டாலர். 2020-ல் ஐ.நா.,வின் உலக உணவுத் திட்டத்திற்கு திரட்டப்பட்ட நிதி 840 கோடி டாலர். எப்படி அது உலக பட்டினியை தீர்க்காமல் போனது?' என கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரது பதிவுக்கு கீழ் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், “600 கோடி டாலர் எப்படி உலக பட்டினியை போக்கும் என்று உலக உணவுத் திட்டம் சரியாக வரையறுத்தால் நான் எனது டெஸ்லா பங்குகளை விற்று 600 கோடி டாலர் தர தயார்.” என்றார். இதற்கு பதிலளித்துள்ள அத்திட்டத்தின் இயக்குனர் டேவிட் பீஸ்லே, “செய்தித் தலைப்பு தவறாக வெளியாகியுள்ளது. 600 கோடி டாலர் உலக பட்டினியை போக்காது. ஆனால், அப்பணம் புவிசார் அரசியல் ஸ்திரமின்மையை தடுக்கும். பெருமளவிலான மக்கள் கூட்டம் இடம்பெயர்வதை தடுக்கும். மேலும் 4.2 கோடி மக்களை பட்டினியின் விளம்பிலிருந்து காப்பாற்றும்,” என்றார்.
அப்போதும் விடாத எலான் மஸ்க், “உங்கள் தற்போதைய மற்றும் திட்டமிட்டுள்ள செலவினங்களை விரிவாக வெளியிடுங்கள். அதன் மூலம் பணம் எங்கு செல்கிறது? என்பதை மக்கள் பார்க்க முடியும். வெளிப்படையாக இருப்பது அற்புதமான விஷயம்,” என கூறினார்.