கடந்த வாரம் தி.மு.க.,வும், அதன் தோழமை கட்சிகளும் சோக ஆலாபனையில் ஈடுபட்டன. மோடி, காடுகளை அழிக்க நினைக்கிறார். வனச் சொத்துக்களை, 'கார்ப்பரேட்' கம்பெனிகளுக்கு தாரை வார்க்க முயற்சிக்கிறார். கடந்த முறை ஏழு வழிச்சாலை என்ற பெயரில், லட்சக் கணக்கான மரங்களை வெட்ட முயற்சித்தார்.
இப்போது நேரடியாக காடுகளை அழிக்க சட்டம் கொண்டு வருகிறார் என்று கட்சிகள் போட்ட கூப்பாட்டை விட, 'உலகை காப்பாற்றப் போகிறோம்; பிரபஞ்சத்தைக் காப்பாற்றபோகிறோம்' எனக் கிளம்பி இருக்கும் தன்னார்வ அமைப்புகளின் கூப்பாடு அதிகமாகக் கேட்டது.உண்மை என்ன; மெய்ப்பொருள் காண்போம்.
பிடித்தது சனி
வனப் பாதுகாப்புச் சட்டம், 1980ம் ஆண்டு இயற்றப்பட்டது. அதன்படி காடு என்று அறிவிக்கப்பட்ட நிலத்தை, வேறு வகைக்கு பயன்படுத்த வேண்டும் என்றால், மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டால், அழிக்கப்படும் காட்டுக்கு இணையான நிலத்தையும், அதில் மரங்கள் வளர்ப்பதற்கான செலவையும் அவர்கள் ஏற்க வேண்டும். கடந்த, 1996ல் கோதவர்மன் என்பவர், நீலகிரி மலையில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் பொருட்டு, பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதில், ஒரு விசித்திரமான தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன் விபரம்:
* எந்த நிலமாக இருந்தாலும், யாருக்கு சொந்தமாக இருந்தாலும், அரசு ஆவணங்களில் அது காடு என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அது பாதுகாக்கப்பட்ட காடு என்ற அந்தஸ்தை பெற்று விடும்
* 'டிக்ஷனரி'யில் காடு என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளதோ, அந்த தன்மை உடைய எல்லா நிலமும், காடு என்ற வரையறைக்குள் வரும்
* நீதிமன்றம் நியமித்த குழு, ஏதாவது ஒரு நிலத்தை காடு என்று சொன்னால், அது காடாகி விடும்.இந்த மூன்று அம்சங்கள் தான், இன்றைய மொத்த குழப்பத்திற்கும் காரணம்.
உதாரணமாக, ஒரு தந்தை தன் மகனுக்கு பனை மரத் தோப்பையும், மகளுக்கு தென்னந்தோப்பையும் எழுதி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மகளுடைய பத்திரத்தில் தென்னந்தோப்பு என்று இருக்கும்; பிரச்னை இல்லை. மகனுடைய பத்திரத்தில் பனங்காடு என்று இருக்கும்.
பிடித்தது சனி. அரசு ஆவணத்தில் காடு என்று வந்து விட்டதால், அவன் அதில் மரம் வெட்ட, அரசின் அனுமதி பெற வேண்டும். அதில் ஒரு வீடு கட்ட வேண்டுமென்றால், அதே அளவு மனையை வேறு இடத்தில் வாங்கி, அரசுக்கு வழங்க வேண்டும். அதில் மரம் வளர்க்க இழப்பீட்டு தொகையும் கொடுக்க வேண்டும்.
சூன்யம் வைப்பானேன்
காரணம், 1996ல் வந்த தீர்ப்பு. பனங்காடு, முந்திரிக்காடு, கள்ளிக்காடு, சவுக்குக்காடு என்று சாதாரணமாக நினைத்து எழுதப்பட்ட ஆவணங்கள் எல்லாம், இன்று பிரச்னையில் சிக்கி உள்ளன. இந்த ஒரு காரணத்திற்காக, இன்றும் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அடுத்தது டிக்ஷனரி பிரச்னை.
காடு என்பதற்கு ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் 400 அர்த்தங்கள் தரப்பட்டுள்ளன. எதை எடுத்துக் கொள்வது? தமிழில் காடு என்றால் மிகுதி என்ற பொருளும் உண்டு. வெள்ளக்காடாக இருக்கிறது; தலைமுடி காடு போல வளர்ந்து கிடக்கிறது என்பதெல்லாம் சர்வ சாதாரணமாக பேச்சில் உள்ளவை.
ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு 0.05 ஹெக்டேருக்கு மேலாக, 5 மீட்டர் உயரமுள்ள மரங்கள் அடங்கிய, எந்த நிலத்தையும் காடு என்று அழைக்கலாம் என்று கூறி இருக்கிறது. இப்படிப் பார்த்தால், தென்னந்தோப்புகள் எல்லாமே காடுகள் தான்.இப்படிப்பட்ட முட்டாள்தனமான முரண்பாடுகளை களைந்து, அரசும், நில உரிமையாளர்களும் பயன் பெறும் விதத்தில் கொண்டு வந்தது தான், இந்த சட்டத்திருத்த மசோதா.
முதல் திருத்தம் தனியாருக்கானது. ஒருவருடைய சொந்த நிலத்தில் உள்ள மரங்களை அனுமதி இன்றி வெட்டிக் கொள்ளலாம். இதனால் மரங்கள் வளர்ப்பது அதிகரிக்கும். குழப்பமாக இருக்கிறதா? தங்களது நிலத்தில் மரம் வளர்த்தால், வீண் பிரச்னை வரும் என்று, லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாக போடப்பட்டுள்ளன. இனிமேல், அதன் உரிமையாளர்கள் அதில் மரம் வளர்த்து, அவற்றை வியாபார நோக்கில் விற்பதில் தடை இல்லை.
உதாரணமாக காவிரியின் இரு கரையிலும் அரிப்பு ஏற்படுகிறது என்பதால், கர்நாடக அரசு, விவசாயிகளை கரையோரமாக மரம் வளர்க்க அழைத்தனர். சொந்த நிலத்தில் சூன்யம் வைப்பானேன் என்று, யாரும் முன்வரவில்லை. இப்போது தானே முன்வருவர்.அடுத்த மிகப் பெரிய பயனாளிகள், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறைகள். ரயில்வே தண்டவாளங்களுக்கு இரு புறமும் அத்துறைக்குச் சொந்தமாக ஏராளமான ஏக்கர் நிலங்கள் உள்ளன. சும்மா இருப்பானேன் என்று, அதில் மரம் வளர்த்தனர்; மாட்டிக் கொண்டனர்.
விரிவாக்கம் செய்யவும், தாண்டிச் செல்லவும் கூட முடியாமல் தவித்தனர். அதே போலத் தான் நெடுஞ்சாலை துறையும். இனி, இரு துறைகளும் தங்கள் நிலத்தில் தேவைப்படும் போது மரத்தை வெட்டிக் கொள்ளலாம்.
எங்கே இருக்கிறது?
தேசத்தின் எல்லையோர பாதுகாப்புக்காக, மரங்களை வெட்ட அனுமதி தேவை இல்லை. இந்த மூன்று விஷயங்களைத் தவித்து சுரங்கம் அமைத்தல், எண்ணெய் எடுத்தல் போன்ற பணிகளுக்கு, நேர்துளை கிணறுகளானாலும், சாய்துளை கிணறுகளானாலும் முறைப்படி அனுமதி பெற வேண்டும். இதில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது எங்கே இருக்கிறது?
இறுதியாக, பொதுவான ஒரு செய்தி. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்றால், மரங்களை உரிய நேரத்தில் வெட்ட வேண்டும். ஒரு மரம் வளரும் போது அதன் உயரமும், சுற்றளவும் அதிகரித்துக் கொண்டே போகும். அது முழுக்க முழுக்க கார்பன். கரியமில வாயுவில் இருந்து பிரித்தெடுத்தது. அந்த பருவத்தில் ஒரு மரம் மிக அதிகமான கரியமில வாயுவை தனக்குள்ளே தக்கவைத்துக் கொள்கிறது.
இயற்கையின் நண்பர்கள்
அதே மரம் தனக்குரிய உயரத்தையும், சுற்றளவையும் அடைந்து விட்டால், உயிர் வாழத் தேவைப்படும் அளவை மட்டும் தான் பயன்படுத்தும். இத்தகைய பருவம் அடந்த மரங்களை வெட்டிவிட்டு புதிய கன்றுகளை நட்டால், அவை தொடர்ந்து காற்றை சுத்தம் செய்த வண்ணம் இருக்கும். இந்த எளிமையான கருத்தைக் கூட தெரிந்து கொள்ளாமல், சில அமைப்புகள் வைரம் பாய்ந்த மரங்களைக் கூட வெட்டக் கூடாது என்று, போராட்டம் செய்வதும், தங்களை இயற்கையின் நண்பர்கள் என்று அழைத்துக் கொள்வதும், நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவே அர்த்தம்.
பா.பிரபாகர்,
எழுத்தாளர்