கோவை: மறைமுக தேர்தல் என்பதால், கோவை மேயர் பதவிக்கு போட்டியிடலாம் என்ற கனவில் இருந்த வி.ஐ.பி.,க்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
உச்சநீதிமன்ற கண்டிப்பு காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நான்கு மாதங்களுக்குள் நடத்தி முடிக்கும் கட்டாயத்தில், மாநில தேர்தல் ஆணையம் உள்ளது. மண்டல ஆய்வுக்கூட்டங்களை நடத்தியிருக்கும் ஆணையம், தேர்தல் நடத்துவதற்கு முழு வீச்சில் தயாராகும்படி அலுவலர்களை அறிவுறுத்தியிருக்கிறது. மத்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல், அந்தந்த உள்ளாட்சி அமைப்பினரிடம் தரப்பட்டுள்ளது. அதைக்கொண்டு வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடக்கிறது. இதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தயார் செய்யப்படும் வாக்காளர் பட்டியலை, மாவட்ட கலெக்டரிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகு அச்சுக்கு தர வேண்டும். அவ்வாறு தயாராகும் வாக்காளர் பட்டியலை, நவ.,25ல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறைந்த நாட்களே இருப்பதால் அலுவலர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர்.

மேயர், நகராட்சி சேர்மன், பேரூராட்சி சேர்மன் பதவியிடங்களுக்கு நேரடி தேர்தலா, மறைமுக தேர்தலா என்பதை இதுவரை, தமிழக அரசோ, தேர்தல் ஆணையமோ வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், தற்போது நடந்து வரும் பணிகள், இருக்கும் ஓட்டுச்சாவடிகளுக்காக தயார் செய்யப்படும் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், மறைமுக தேர்தல் தான் நடக்கும் என்பது உறுதியாகி விட்டது. தங்களுக்கும் வசதி என்பதால் மறைமுக தேர்தல் நடத்தவே ஆளும் கட்சி தலைமையும் விரும்புகிறது. இதனால் மேயர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை, எதிர்பார்த்து காத்திருந்த கோவை வி.ஐ.பி.,க்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் மேயர் என்றால், எம்.பி.,- எம்.எல்.ஏ.,வுக்கு இணையான மரியாதை இருக்கும்; ஆறு எம்.எல்.ஏ., தொகுதிகளில் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்வதன் மூலம், தோற்றாலும் கவுரவம் இருக்கும். மறைமுக தேர்தல் என்றால், கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றாலே போதும். எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்கள், எம்.எல்.ஏ.,- எம்.பி., பதவிக்கு போட்டியிட்டவர்கள் அதற்கு விரும்ப மாட்டார்கள். 'ஒரு வேளை தோற்று விட்டால், மானம் மரியாதை மொத்தமாக கப்பலேறி விடும் என்ற பயமும் அவர்களுக்கு இருக்கும்' என்பது அரசியல் கட்சியினர் கருத்தாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE