திருப்பூர்:கோவையில் தொடர் மழையால், திருப்பூர் நொய்யலில் புது வெள்ளம் பாய்ந்தோடி வருகிறது.கடந்த 10 ஆண்டுகள் முன்பு, பாழ்பட்டு கிடந்த நொய்யல் ஆறு, தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், சிறுதுளி உள்ளிட்ட அமைப்புகளும், திருப்பூரில் ஜீவநதி நொய்யல் சங்கமும், நொய்யலை தத்தெடுத்து, பராமரித்து வருகின்றன.
தமிழக அரசு, 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நொய்யல் ஆறு மற்றும் குளம், குட்டைகள், ராஜவாய்க்கால்களை சீரமைத்து, கான்கிரீட் தளம் அமைத்து வருகிறது. திருப்பூரில் நொய்யல் ஆற்றுக்குள், 'பேபி' வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளதால், கழிவுநீர் பரவலாக செல்லாமல், வேகமாக வடிந்தோடுகிறது.வடகிழக்கு பருவ மழை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால், குளம், குட்டைகள் வேகமாக நிரம்பிவிட்டன. நொய்யல் ஆற்றில், கடந்த ஒரு வாரமாக, மிதமான வெள்ளம் செல்கிறது.கோவையில் இருந்து, உற்சாகத்துடன் பாய்ந்து வரும் புது வெள்ளம், திருப்பூரை கடந்து சென்று கொண்டிருப்பதை, மக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்து மகிழ்கின்றனர்.
நேற்று முன்தினம், திடீர் வெள்ள பெருக்கால், அணைப்பாளையம் நொய்யல் பாலம் தண்ணீரீல் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.திருப்பூர் வடக்கு தாலுகாவில், கரையோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடத்துக்கு செல்ல, வருவாய்த்துறை தொடர்ந்து அறிவிப்பு செய்து வருகிறது.மங்கலம், நல்லம்மன் தடுப்பணை, அணைமேடு பகுதியில் உள்ள அணை, பாளையக்காடு பகுதியில் உள்ள சிறு தடுப்பணைகளில், தண்ணீர் நிறைந்து, உற்சாகத்துடன் வழிந்தோடுகிறது.சாக்கடை கழிவுநீரையே கண்டு சளித்துப்போன திருப்பூர் மக்கள், நொய்யலில் புது வெள்ளம் பாய்ந்தோடுவதை பார்த்து, பரவசம் அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன், நொய்யலில் வெள்ளம் பாய்ந்தோடுவதையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.