கடந்த 2012-13ம் ஆண்டுகளில், ஆவணங்களாக இருந்த பட்டா விவரங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டது. பதிவேற்றம் செய்யும் போது, பட்டாதாரர் பெயர், கூட்டு பட்டாவில் உள்ள பெயர்கள், பரப்பளவு, க.ச., எண் குளறுபடி என, பல்வேறு தவறுகள் நடந்துள்ளன.நில உரிமையாளர்கள், அவற்றை சரிசெய்ய வேண்டுமென, தாலுகா அலுவலகத்துக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற தவறுகளை சரிசெய்ய, பட்டா திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தின் முதன்முதலாக, காங்கயம் தாலுகாவில் நேற்று துவங்கியது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பட்டா ஆவணங்களில் உள்ள விவரம், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் போது மாறியிருந்தால், சிறப்பு முகாமில் விண்ணப்பித்து சரிசெய்து கொள்ளலாம். சரியான ஆவணங்களை சமர்ப்பித்து திருத்தம் செய்யலாம். மற்றபடி, வேறு திருத்தம் எதுவும் செய்ய இயலாது. இத்துடன், மற்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மனு கொடுக்கலாம்,' என்றனர்.