திருப்பூர்:ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம்(ஏ.இ.பி.சி.,) மற்றும் பொது வரி செலுத்துவோர் சேவைகள் இயக்குனரகம் (டி.ஜி.டி.எஸ்.,) சார்பில், 'மத்திய மற்றும் மாநில வரிகள் திட்டம்' என்ற தலைப்பில் 'ஆன்லைன்' கருத்தரங்கம் நடந்தது. ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் துவக்கி வைத்தார்.வரி செலுத்துவோர் சேவை தலைமை இயக்குனரக(டி.ஜி.டி.எஸ்.,) கூடுதல் தலைவர் தேஜ்பால்சிங் பேசுகையில், 'ஜவுளித்துறை அமைச்சகம், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, கொள்கைகளை வகுத்து, ஆயத்த ஆடை உற்பத்தி துறைக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்துவருகிறது. ஆடைகளுக்கு, ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., சலுகை, நடப்பு ஆண்டு ஜனவரி முதல், வரும் 2024, மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.' என்றார்.'டிராபேக்' இயக்குனர் கோபால் கிருஷ்ண ஜா பேசுகையில், ''ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., திட்டக்குழு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது; ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கு, வெளிநாட்டு வர்த்தக கொள்கையில், இந்த திட்டத்தை இணைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.ஆர்.ஓ.டி.டி.இ.பி., திட்டத்தில், ஏற்றுமதியாளர்களுக்கு, 16,042 கோடி ரூபாய் மதிப்பிலான மாற்றத்தக்க சான்று வழங்கப்பட்டுள்ளது. ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., திட்டத்தில், 800 கோடி ரூபாய் மதிப்பிலான சான்று வழங்கப்பட்டுள்ளது'' என்றார். ஏ.இ.பி.சி., பொதுச்செயலாளர் சிங்கால் வாழ்த்தி பேசினார். துணை தலைவர் நரேந்திர கோயங்கா நன்றி கூறினார்.