பொங்கலுார்:திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கொப்பரை உற்பத்தி அதிக அளவில் நடக்கிறது. தை மாதம் முதல் புரட்டாசி வரை கொப்பரை உலர் களங்கள் சுறுசுறுப்பாக இயங்கின. தற்போது மழை பெய்து வருவதால் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உலர்த்துவது தாமதமாவதோடு, தரமான கொப்பரை தயாரிக்க முடிவதில்லை.இதுதவிர, பெரும்பாலான தொழிலாளர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். அனைவரும் தீபாவளி ஊருக்கு சென்று விட்டனர். அவர்கள் திரும்பி வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிடும். மழை நீடிக்கும் பட்சத்தில் அவர்கள் வருவதற்கு மேலும் தாமதம் ஆகலாம்.உள்ளூர் தொழிலாளர்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, உள்ளூர் தொழிலாளர்களை நம்பி கொப்பரை தயாரிப்பது இயலாத காரியம். உற்பத்தி முடக்கம் ஏற்படுவதால் இருப்பு வைத்துள்ள கொப்பரை மட்டுமே விற்பனைக்கு வரும்.தற்போது, ஒரு கிலோ கொப்பரை,100 ரூபாய்க்கு விலை போகிறது. தோப்புகளில் சராசரியாக ஒரு காய், 13 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கொப்பரை உற்பத்தி பாதிக்கப்படுவதால் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.