புதுடில்லி : ஆதார் சட்டத்தை மீறுபவர்கள் மீது ௧ கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் அதிகாரம் படைத்த, நீதிபதி அந்தஸ்திலான அதிகாரியை நியமிக்க, யு.ஐ.டி.ஏ.ஐ.,க்கு மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
மத்திய அரசின் யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஒருங்கிணைந்த அடையாள ஆணையம், நாட்டு மக்களுக்கு ஆதார் அட்டைகளை வினியோகித்து வருகிறது. ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவதால், தனி நபர் ரகசியம் வெளியாகும் ஆபத்து இருப்பதாக பலர் கவலை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, ஆதார் அடையாள அட்டை வழங்கும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஒருங்கிணைந்த அடையாள ஆணையத்துக்கு, அரசின் பிற கட்டுப்பாட்டு அமைப்புகள் போல, அதிக அதிகாரங்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.
ஆதார் சட்டத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன்படி, ஆதார் விதிகளை முறையாக பின்பற்றாத நிறுவனங்களுக்கு ௧ கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். ஆதார் விதிகளை தொடர்ச்சியாக மீறி வரும் நிறுவனங்களுக்கு, ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் வீதம், கூடுதலாக அபராதம் விதிக்கும் வகையிலும் புதிய விதிகள் வகுக்கப்பட்டன. இந்த ஆதார் திருத்த சட்டம் 2019ல்
நிறைவேறியது.
சட்டம் நிறைவேறி இரண்டு ஆண்டுகள் ஆகியும், வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க நீதிபதி அதிகாரம் படைத்த அதிகாரி நியமிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமலேயே இருந்தது.இந்நிலையில், விசாரணை அதிகாரியை நியமிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:
ஆதார் சட்ட விதிமீறல் தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க, நீதிபதி அந்தஸ்திலான அதிகாரியை யு.ஐ.டி.ஏ.ஐ., நியமிக்கும். விதிமீறலில் ஈடுபடுவோருக்கு ௧ கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க இந்த அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீடுகளை தொலைத்தொடர்பு குறை தீர்ப்பு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் விசாரிக்க
அதிகாரம் உள்ளது.
நீதிபதி அந்தஸ்திலான விசாரணை அதிகாரி பதவிக்கு, இணை செயலர் அந்தஸ்திலுள்ள அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். அவர் 10 ஆண்டுகளுக்கு குறைவில்லாத அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். சட்டம், நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட ஏதாவது ஒரு துறையில் குறைந்தது மூன்றாண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.ஆதார் வழக்குகள் தொடர்பான தகவல்கள், ஆவணங்களை சேகரித்து அதை விசாரணை அதிகாரி முன், சமர்ப்பிக்கும் அதிகாரியை யு.ஐ.டி.ஏ.ஐ., பரிந்துரை செய்ய வேண்டும்.ஆதார் சட்ட விதி மீறலில் ஈடுபட்ட தனி நபர் அல்லது நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கு முன், விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட வேண்டும்.
வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து தெரிந்த எந்தவொரு நபரையும் சாட்சியளிக்க நேரில் அழைக்கவும், தீர்ப்பளிக்கவும், நீதிபதி அந்தஸ்திலான விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.வழக்கில் விதிக்கப்படும் அபராத தொகை யு.ஐ.டி.ஏ.ஐ., நிதியத்தில் சேர்க்கப்பட வேண்டும். அபராதம் செலுத்த தவறினால், ஜப்தி நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.