புதுடில்லி :''வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி 'டோஸ்' போடும் பணியை துவக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டில், கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி கடந்த ௧௦ மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. நாட்டில், 107.29 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 30 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டுள்ளனர்.இந்நிலையில், மக்களிடம் ஆர்வம் இல்லாததால், சில மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி மந்தமாகியுள்ளது. இதையடுத்து, நாடு முழுதும் ௫௦ சதவீதத்துக்கும் குறைவாக தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ள ௪௦க்கும் அதிகமான மாவட்டங்களின் கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பிரதமர்பேசியதாவது:
புதுமையான முறை
கொரோனா பரவல் துவங்கிய போது, இந்தியாவால் சமாளிக்க முடியாது; பல கோடி மக்கள் பாதிக்கப்படுவர் என, பலரும் கூறினர். ஆனால், கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி தயாரித்தது மட்டுமின்றி, அதை மக்களுக்கு இலவசமாக போடுவதிலும் சாதனை படைத்துஉள்ளோம்.உங்களின் கடின உழைப்பால் தான், இந்த சாதனையை படைக்க முடிந்தது. களப்பணியாளர்கள், தொலைதுார இடங்களுக்கு பல மைல் துாரம் நடந்து சென்று தடுப்பூசி போட்டுள்ளனர்.
இதனால் தான் நம்மால், கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீள முடிந்தது.ஆனால், நாட்டில் கொரோனா ஆபத்து குறையவில்லை. அதனால் அலட்சியத்துக்கு இடமில்லை. நாம் தற்போது தளர்ந்து போனால், ஒரு புதிய நெருக்கடி வரலாம். நோய் மற்றும் எதிரிகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.
அதற்கு எதிராக, இறுதிவரை போராட வேண்டும். உங்கள் பகுதிகளில் தடுப்பூசி டோஸ் போடும் பணியை அதிகரிக்க, நீங்கள் புதுமையான முறைகளை கையாள வேண்டும். தடுப்பூசி குறித்து மக்கள் இடையே பரப்பப்படும் வதந்தி மற்றும் தவறான தகவல் போன்ற சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதற்கு தீர்வாக அமையும்.தடுப்பூசி குறித்து, மக்களிடம் உள்ள அச்சத்தை போக்கும் பணியில், மதத்தலைவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
நேரம் வந்துவிட்டது
அவர்கள் சொன்னால், மக்கள் நிச்சயம் கேட்பர். நாட்டில், ௧௮ வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதை உறுதி செய்ய வேண்டும். இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.இதுவரை, மக்களை மையங்களுக்கு வரவழைத்து பாதுகாப்பான முறையில் தடுப்பூசி போட்டோம். இனி, வீடு வீடாக சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், ஜார்க்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலபிரதேசம், மஹாராஷ்டிரா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், மஹாராஷ்டிரா
முதல்வர் உத்தவ் தாக்கரே, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த ஆண்டும் வீரர்களுடன் தீபாவளி
பிரதமராக பதவியேற்ற பின், தீபாவளி பண்டிகையை, ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை, நரேந்திர மோடி வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த ௨௦௧௯ல், ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர், கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெயசால்மர் மாவட்டம் லாங்கிவாலா எல்லையில் தீபாவளியை கொண்டாடினார்.இந்த ஆண்டும், பிரதமர் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுகிறார். இதற்காக ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின், நவ்ஷேரா மற்றும் ரஜோரி எல்லைக்கு செல்லும் பிரதமர், அங்கே ராணுவ வீரர்களுடன் தீபாவளியை
கொண்டாடுகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE