சென்னை : நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு இன்று (நவ.,4) முதல் அமலுக்கு வருகிறது.
பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஒரு மாதமாக எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலை தினமும் சராசரியாக, 30 காசுகள் -வரை விலை உயர்த்தப்பட்டு வந்தது.
குறிப்பாக, டீசல் விலை உயர்வால், சரக்கு வாகனங்களின் போக்குவரத்து செலவு அதிகரித்தது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வந்தது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமாறு, மத்திய - மாநில அரசுகளுக்கு, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழகத்தில் நேற்று லிட்டர் பெட்ரோல் 106.66; டீசல் 102.59 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையிலும், தீபாவளி பரிசாகவும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று இரவு அதிரடியாக குறைத்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு, 10 ரூபாயும் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதையடுத்து தமிழகத்தில், பெட்ரோல் லிட்டருக்கு 101.66 ரூபாய்க்கும்; டீசல் லிட்டருக்கு 92.59 ரூபாய்க்கும் விற்கப்படும். மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வாகன உரிமையாளர்களும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE