திருப்பூர் ;திருப்பூரில் 29.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய தொட்டி, பயன்பாட்டுக்கு வரும் முன்பே, மண்ணுக்குள் புதைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில், 'அம்ருத்' திட்டத்தில் பாதாள சாக்கடை திட்ட கட்டுமானப் பணி நடந்து வருகிறது. சின்னாண்டிபாளையம் பிரிவு, ஆண்டிபாளையம் குளம் எதிரே 29.37 கோடி ரூபாய் மதிப்பில், 2 கோடி லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில், சுத்திகரிப்பு மையம் கட்டுமானப் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்ட பின், 'குளோரினேசன்' செய்ய 9 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலமட்ட தொட்டி கட்டப்பட்டுள்ளது.
தொடர் மழையால், தற்போது ஆண்டிபாளையம் குளம் நிரம்பியுள்ளது.அருகேயுள்ள சிறு பாலம் வழியாக குளத்து நீர் வெளியேறி, சுத்திகரிப்பு மைய கட்டுமானம் நடக்கும் இடத்தில் பெருமளவு தேங்கியது. தேங்கிய நீரை, மோட்டார் வாயிலாக உறிஞ்சி அப்புறப்படுத்தும் பணி கடந்த வாரம் நடந்தது.
நேற்று காலை, திடீரென குளோரினேசன் தொட்டி கட்டுமானம் 3 அடி அளவுக்கு மண்ணுக்குள் புதைந்தது. அதன் அருகில் உள்ள கண்காணிப்பு அறையின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.
மாநகராட்சி அலுவலர்கள், பொறியியல் பிரிவினர் ஆய்வு நடத்தினர். இரும்பு குழாய்கள் வைத்து முட்டு கொடுக்கப்பட்டது.
கட்டுமான பணி நிறுத்தப்பட்டது.கடந்த 2019 பிப்., மாதம் கட்டுமான பணி துவங்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த எக்கோ இன்ஜினியர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. கோவை சி.ஐ.டி., கல்லுாரி சிவில் துறை வல்லுனர்கள் குழு, மண் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை அளித்தது.கட்டுமான பணிக்கான வடிவமைப்பை மேற்கொண்டு, புதிய திருப்பூர் மேம்பாட்டு கழக பொறியியல் பிரிவு ஆலோசனைப்படி, கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது.மண் பரிசோதனை செய்த பின்பே, பணி நடந்துள்ளதால், கட்டுமானத்தில் தரம் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆய்வு செய்ய முடிவு
மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் கூறுகையில், ''மண் பரிசோதனை மற்றும் வடிவமைப்பு செய்த வல்லுனர் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு செய்து, மாற்று ஏற்பாடு குறித்து அறிக்கை அளிக்க உள்ளனர்.''குளத்தில் இருந்து இப்பகுதிக்கு சிறுபாலம் வழியாக நீர் வருகிறது. அங்கு நீர் வராமல் தடுக்கப்படும்'' என்றார்.