ஓசூர் :வேலுார் பொதுப்பணித்துறை பெண் செயற்பொறியாளரின் ஓசூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் 2.28 கோடி ரொக்கம் தங்கம், வெள்ளி நகைகள், பினாமி பெயரில் இருந்த ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கையால் அதிகாரிகள் பலர்பீதியில் உள்ளனர்.வேலுார் தந்தை பெரியார் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் வேலுார் கோட்ட பொதுப்பணித்துறை தொழில்நுட்ப கல்வி பிரிவு செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. ஷோபனா 58, என்பவர் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
அனுமதி
இவர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் கலை இன்ஜினியரிங், பாலிடெக்னிக் கல்லுாரிகளின் கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்குவது, அதற்கான பில் தொகையை ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார்.இதற்காக கணிசமான தொகையை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சமாக பெறுவதாக வேலுார் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
இதன்படி அன்றிரவு வேலுார் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்து வெளியே வந்த ஷோபனாவை சுற்றிவளைத்தனர். அவரிடம் கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் சிக்கியது.
விசாரணை
இன்ஸ்பெக்டர் விஜய், போலீசார் அதே வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஷோபனா தங்கியிருந்த அறைக்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர். அங்கு அவரது பினாமி பெயரில் 3.92 லட்சம் ரூபாய்க்கு லஞ்சமாக வாங்கிய வங்கி காசோலை மற்றும் 15.80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகர் இரண்டாவது தெருவில் உள்ள ஷோபனாவின் வீட்டில் சோதனை நடத்த திட்டமிட்டனர்.
சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன், வேலுார் ஆய்வு குழு அலுவலர் முருகன், இன்ஸ்பெக்டர்கள் ரஜினிவேலு, சையத் சுல்தான்பாஷா ஆகியோர் நேற்று காலை 8:00 முதல் மதியம் 1:30 மணி வரை அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
வீட்டில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரூபாய், 11 வங்கி கணக்கு விபரங்கள், 35 சவரன் தங்க நகைகள் 1.3 கிலோ வெள்ளி பொருட்கள் 27.98 லட்சம் ரூபாய் மதிப்பிலான வங்கி நிரந்தர டிபாசிட் ஆவணங்கள் பினாமிகள் பெயரில் இருந்த 14 சொத்து ஆவணங்கள் மற்றும் ஒரு வங்கி லாக்கர் சாவியை பறிமுதல் செய்தனர்.
லாக்கரை திறந்து பார்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஷோபனாவிடம் இருந்து மொத்தம் 2 கோடியே 27 லட்சத்து 75 ஆயிரத்து 300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.வேலுார் மாவட்ட நன்னடத்தை அலுவலர் முருகன் புகார்படி ஷோபனா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை கைது செய்வதா என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர். அவரது வங்கி கணக்குகளை முடக்கவும் முடிவு செய்துள்ளனர்.
ஓராண்டில் சிக்கிய 20 அதிகாரிகள்
வேலுார் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல சோதனைகளை நடத்தியுள்ளனர். மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் பன்னீர்செல்வம் டாஸ்மாக் மேலாளர் உமா திருவள்ளுவர் பல்கலை முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அசோகன்.
வேலுார் மண்டல தலைமை பொறியாளர் வெங்கடேசன் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர் கண்ணன் உட்பட 20 அதிகாரிகள் வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தி 15 கோடி ரூபாய் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் பன்னீர் செல்வத்திடம் இருந்து 5 கோடி ரூபாயையும் 100 கோடி ரூபாய்க்கான சொத்து பத்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர். இவர் தான் லஞ்சம் வாங்கியதில் முதலிடத்தில் வருகிறார்.
கிருஷ்ணகிரியில் அதிகம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் போக்குவரத்துத் துறை சோதனைச்சாவடி உட்பட பல்வேறு பகுதிகளில் பல்வேறு கால கட்டங்களில் சோதனை நடத்தியுள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு அரசு அதிகாரி வீட்டில் இருந்து 2 கோடி ரூபாய்க்கு மேல் சிக்குவது இதுவே முதல்முறை என்று போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE