உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்

வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள், மாறி மாறி ஆட்சிக்கு வரும் போதெல்லாம், முன்னாள் அமைச்சர்கள், உயரதிகாரிகள் வீடு, அலுவலகம், 'பினாமி' இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவது வழக்கம்.'அய்யோ... இவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறாரே...' என நாம் வாயை பிளந்து பார்த்தும், படித்தும், தேர்தல் நேரத்தில் அதை மறந்தும் விடுகிறோம்.
ஆட்சி மாறினாலும், காட்சி மாறாமல் எதிர் தரப்பினர் மீது, 'ரெய்டு' நடத்தப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு ஏற்றாற்போல், தாங்கள் ஊழல் செய்து சேர்த்து வைத்துள்ள சொத்தை, முறையாக பதுக்கி விடுவர். ஒவ்வொரு அமைச்சரும், அந்தந்த பகுதிகளின் குறுநில மன்னர் போல எல்லை விரித்து செயல்படுகின்றனர்.ரெய்டு நடப்பதால், அரசியல்வாதிகள் பதுக்கியிருந்த பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், அரசு கஜானாவிற்கு வந்து சேரும் என எதிர்பார்க்க கூடாது;
அது நடக்கக் கூடிய காரியம் அல்ல.இது தொடர்பான வழக்கில் தண்டனை பெறுவோர், வெறும் 1 சதவீதம் தான்; மற்ற 99 சதவீதம் பேர், ஊழல் பணியை தொய்வின்றி தொடருவர். ரெய்டு நடப்பதும், வழக்கு தொடுப்பதும், இத்தனை கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளாரா என்ற அதிர்ச்சியும், காலப்போக்கில் மக்கள் மனதில் இருந்து அகன்று விடும்.

இது அப்போதைக்கு, படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும். மற்றபடி ரெய்டு என்பது, ஊழலுக்கு எதிராக எந்த கல்லையும் துாக்கி போடாது! ரெய்டு என்பது வெறும், 'வைடு, நோ பால்' கணக்குத் தான். விக்கெட்டை வீழ்த்த பயன்படாது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE