கோவை:சிங்காநல்லுார் வாய்க்கால் முழுவதையும் துார்வாரி ஆழப்படுத்தாததால், குளத்துக்கு தண்ணீர் செல்வது குறைந்திருக்கிறது; அதிகளவு தண்ணீர் ஆற்றிலேயே செல்கிறது.
உக்கடம் பெரிய குளம் நிரம்பியதும் உபரி நீர், வாலாங்குளத்துக்கும், கரும்புக்கடை சாரமேடு வழியாக நஞ்சுண்டாபுரம் வாய்க்கால் வழியாக சிங்காநல்லுார் குளத்துக்கு சென்றடையும். நஞ்சுண்டாபுரம் பகுதியில் அணைக்கட்டும், நீர் வழங்கு வாய்க்காலும் அமைந்திருக்கிறது. இப்பகுதி புதர் மண்டி காணப்பட்டதால், சிங்காநல்லுார் குளத்துக்கு தண்ணீர் செல்லவில்லை. வழங்கு வாய்க்கால் பராமரிக்கும் பொறுப்பை, மாநகராட்சி வசம் ஒப்படைத்து விட்டோம்; எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்கிற ரீதியில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.
விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், அணைக்கட்டு பகுதிகளில் வாய்க்காலில் இருந்த அடைப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்றினர். ஆனால், வாய்க்கால் முழுவதும் அடைப்புகளை நீக்கி, துார்வாராத காரணத்தால், சிங்காநல்லுார் குளத்துக்கான நீர் வழங்கு வாய்க்காலில் குறைந்தளவே தண்ணீர் செல்கிறது.நொய்யல் ஆற்றுக்கான மதகு திறக்கப்பட்டிருப்பதால், தண்ணீர் ஆற்றுக்கே திரும்பிச் செல்கிறது. இம்மதகை அடைத்து, குளத்துக்குச் செல்லும் மதகை திறக்க வேண்டும்.
விவசாயிகள் கூறுகையில், 'சிங்காநல்லுார் குளத்துக்குச் செல்லும் நீர் வழங்கு வாய்க்காலில் இருந்த அடைப்புகள், ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன.'வாய்க்கால் கரையை ஆக்கிரமித்து வசிப்போருக்கு, பாதிப்பு வந்து விடக்கூடாது என நினைத்து, வழங்கு வாய்க்காலில் குறைவாகவே தண்ணீர் அனுப்புகின்றனர். அவர்களுக்கு மாற்று வீடு வழங்கி, வாய்க்காலை துார்வார வேண்டும். தங்கு தடையின்றி குளத்துக்கு தண்ணீர் செல்ல, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE