கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும், நிர்ணயிக்கப்பட்ட பஸ் ஸ்டாப்களை விடுத்து, வேறிடங்களில் பஸ்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசலும், விபத்தும் அதிகரித்து வருகிறது.
கோவை நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், நுாற்றுக்கணக்கான பஸ் ஸ்டாப்கள் உள்ளன. உதாரணமாக ஒண்டிப்புதுாரிலிருந்து வடவள்ளி வரை இயக்கப்படும் 1சி டவுன் பஸ், 34 பஸ் ஸ்டாப்களிலும், நகரை சுற்றி வரும் ஏழாம் நம்பர் டவுன் பஸ் 23 பஸ் ஸ்டாப்களிலும் நிறுத்தப்படுகின்றன. ஒவ்வொரு டவுன்பஸ்சும், அதற்கு நிர்ணயிக்கப்பட்ட பஸ் ஸ்டாப்களில் தான் நிற்க வேண்டும்.
இந்த பஸ் ஸ்டாப்களை நிர்ணயிக்கும் அதிகாரம், போக்குவரத்துத் துறைக்கு உள்ளது. போக்குவரத்துக்கழகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ள குழு, இதற்கான இடங்களை தேர்வு செய்து கொடுத்தால், கலெக்டர் தலைமையிலான சாலை பாதுகாப்புக்குழு, அதை அங்கீகரிக்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட பஸ் ஸ்டாப்களில்தான், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட வேண்டும். ஆனால் கோவை நகரில், விளம்பரங்கள் வைத்துச் சம்பாதிப்பதற்காகவே, மாநகரப் பகுதிக்குள் பஸ் ஸ்டாப்கள் இல்லாத இடங்களிலும் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.அதேநேரத்தில், மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத பஸ் ஸ்டாப்களில், நிழற்குடையே இல்லாமல் பயணிகள், வெட்டவெளியில் நிற்கின்றனர்.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற கோரிக்கை ஒரு புறமிருக்க, மற்றொரு புறத்தில் பஸ் ஸ்டாப்கள் இல்லாத பல இடங்களிலும், டிரைவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு பஸ்களை நிறுத்தி, புதிய பஸ் ஸ்டாப்களை உருவாக்கி வருகின்றனர்.அதிலும் பல இடங்களில் நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி, நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படக் காரணமாகின்றனர்.
இதில் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கும், வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கும் இடையில் அடிக்கடி மோதலும் நடந்து வருகிறது.உதாரணமாக, வடவள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சந்திப்புப் பகுதியில், தற்போது 'ரவுண்டானா' அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதன் ஒரு புறத்தில் நுாறடி துாரத்திலுள்ள வடவள்ளி பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து புறப்பட்டு வரும் 1சி டவுன் பஸ்களும், மற்றொரு புறத்தில் மருதமலையிலிருந்து காந்திபுரம் செல்லும் 70ம் எண் டவுன் பஸ்களும் நிறுத்தப்படுகின்றன.இதனால் அந்த இடத்தில் ஒரு நாளுக்கு, நுாறு முறை போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளுக்கான வாய்ப்பும் அதிகரித்து வருகிறது.
வரும்நாட்களில் இவ்வாறு பஸ்களை நிறுத்தாமலிருக்க. அரசு மற்றும் தனியார் டவுன்பஸ் களின் டிரைவர்களுக்கு அறிவுறுத்துமாறு, கோவை சென்ட்ரல் ஆர்.டி.ஓ.,வுக்கு, நெடுஞ்சாலைத் துறையின் கோவை வடக்கு உட்கோட்டத்தின் உதவிக்கோட்டப் பொறியாளர் சோலவளத்தான் கடிதம் எழுதியுள்ளார்.கடிதம் எழுதி, மூன்று வாரங்களாகியும் இதுவரை போக்குவரத்துத்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
இதேபோன்று கோவை அரசு மருத்துவமனை, ஒண்டிப்புதுார் பாலம் அருகில், சிங்காநல்லுார் சாந்தி சோஷியல் சர்வீஸ் எதிரில், ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோட்டில், கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகில் என பல இடங்களில் நடுரோட்டில் பஸ்கள் நிறுத்துவதால், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு, மாவட்ட நிர்வாகத்துக்கே உள்ளது.
போக்குவரத்துத்துறை, மாநகராட்சி, போக்குவரத்துக் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து, நகரிலுள்ள பஸ் ஸ்டாப்களைக் கண்டறிந்து, அங்கு 'பஸ் பே'க்களை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும்.அதற்கு நகர ஊரமைப்புத் துறை யின் நிதியைப் பெற வேண்டும். இந்த விவகாரத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதும், பஸ்களை இஷ்டம்போல இயக்கவிடுவதும் கலெக்டரின் கையில்தான் உள்ளது.
-நமது நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE