சேலம்:கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பூஞ்சை தொற்று காரணமாக இரு கால்களை இழந்த பெண் சேலத்தில் தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் பிளாரன்ஸ் 40;
விவாகரத்து பெற்று பெற்றோருடன் தனியே வாழும் இவர் சட்டக்கல்லுாரி அருகில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்புக்குள்ளாகி பூஞ்சை தாக்கத்தால் ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டு தன் இரு கால்களையும் முழுதாக இழந்தாலும் மற்றவர்களின் பரிதாபங்களை கண்டுகொள்ளாமல் தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்.
தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பிளாரன்ஸ் கூறியதாவது:கடந்த மே 16ல் எனக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. சளி பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என வந்ததால் சாதாரண காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக்கொண்டேன். மே 22க்கு மேல் நடக்க முடியவில்லை. தனியார் மருத்துவமனையில் சேர்ந்தபோது ஸ்கேன் செய்து பார்த்து கொரோனா உறுதி செய்தனர்.
காலில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டதாக கூறியதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.கொரோனா சிகிச்சைக்கு பின் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கு ஒரு மாதம் வரை கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க இருதயத்துக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.பலனின்றி பூஞ்சை தொற்றால் பலன் இன்றி கால்கள் அழுக தொடங்கின. அந்த 50 நாட்களும் நரகத்தை அனுபவித்தேன். வலியில் துாக்கம் என்பதே இல்லாமல் போனது. இதனால் கால்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்தால் 2 சதவீதம் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என கூறினர்.
இருப்பினும் நான் தன்னம்பிக்கையுடன் இருந்தேன். நான்கு அறுவை சிகிச்சைக்கு பின் டாக்டர்களே என் மன உறுதியை பாராட்டினர்.இரு கால்களையும் முழுதாக இழந்தாலும் என் வேலைகளை நானே செய்து கொள்ளவும் முடியும் இதற்கு பிறகான வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக அமைத்து கொள்ள முடியும் எனவும் நம்புகிறேன்.
வயதான பெற்றோருக்கு பின் தனியாகவே என் வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். முட்டிக்கு மேலிருந்து செயற்கை கால்கள் பொருத்த வேண்டியிருக்கும் என்பதால் ஜெர்மன் தொழில்நுட்ப தயாரிப்பை வாங்க அணுகினோம். அதற்கு 7 லட்சம் ரூபாய்க்கு மேலாகும் என தெரிவித்துள்ளனர். இதற்கு எவரேனும் உதவினால் எனக்கு உதவியாக இருக்கும். உடல் உறுப்பை இழந்தால் வாழ்க்கை இருண்டுவிடாது என மற்றவர்களுக்கும் ஒரு உதாரணமாக இருக்கவே விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.இவரது தன்னம்பிக்கையை பாராட்டவும் உதவி செய்யவும் விரும்புவோர் 82209 92958 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.