துபாய்: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் பவுலிங், பேட்டிங்கில் ஜொலித்த இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.
எமிரேட்சில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் 'சூப்பர் 12' சுற்றில் 'குரூப் 2' லீக் போட்டியில் நேற்று இந்தியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இப்போட்டியில் பெரியளவு வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.
'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டார்.
பும்ரா நம்பிக்கை
ஸ்காட்லாந்து அணிக்கு மன்சே, கேப்டன் கோயட்சர் ஜோடி துவக்கம் கொடுத்தது. பும்ரா வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் மன்சே சிக்சர் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். இரண்டாவது ஓவரை வீசிய பும்ரா, 3வது பந்தில் கோயட்சரை (1) போல்டாக்கி நம்பிக்கை கொடுத்தார்.
அஷ்வின் 'ஷாக்'
போட்டியின் நான்காவது ஓவரை வீசினார் அஷ்வின். இதன் கடைசி 3 பந்தில் 'ரிவர்ஸ் ஹிட்' முறையில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விளாசி அதிர்ச்சி கொடுத்தார் மன்சே. குறைந்த ஸ்கோருக்கு கட்டுப்படுத்த நினைத்த இந்தியாவுக்கு, 4 ஓவரில் 25 ரன் எடுத்து 'ஷாக்' கொடுத்தது ஸ்காட்லாந்து.
ஜடேஜா 'இரண்டு'
பின் வந்த ஷமி தனது 2வது பந்தில் மன்சேவை (24) அவுட்டாக்கி, இந்திய ரசிகர்களுக்கு நிம்மதி கொடுத்தார். மறுபக்கம் முதல் ஓவரை வீசிய ஜடேஜா, 3வது பந்தில் பெர்ரிங்டன் (0), கடைசி பந்தில் மாத்யூவை (2) அவுட்டாக்கினார். மீண்டும் மிரட்டிய ஜடேஜா, மைக்கேலை (21) வீழ்த்தினார். அஷ்வின், கிரீவ்சை (1) அவுட்டாக்கினார்.
3 பந்து, 3 விக்.,
போட்டியின் 17 வது ஓவரை வீசிய ஷமி, முதல் பந்தில் மெக்லியாடை (16) போல்டாக்கினார். 2வது பந்தில் சப்யானை (0) ரன் அவுட் செய்தார் இஷான் கிஷான். அடுத்து வந்த ஈவன்சை (0), 3வது பந்தில் போல்டாக்கினார் ஷமி. ஸ்காட்லாந்து அணி 17.4 ஓவரில் 85 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் ஜடேஜா 3, ஷமி 3, பும்ரா 2, அஷ்வின் 1 விக்கெட் சாய்த்தனர்.
ராகுல் அரைசதம்
இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ராகுல் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. வீல் வீசிய 2வது ஓவரில் 3 பவுண்டரி அடித்த ராகுல், ஈவன்ஸ் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் விளாசினார். ஷரீப் ஓவரில் தன் பங்கிற்கு ரோகித், ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடிக்க இந்திய அணி 4.5 ஓவரில் 70 ரன் குவித்தது. இந்நிலையில் ரோகித் (30) அவுட்டானார். வாட் ஓவரில் பவுண்டரி, சிக்சர் அடித்த ராகுல், 18 வது பந்தில் அரைசதம் அடித்து அவுட்டானார். கடைசியில் சூர்யகுமார் யாதவ் ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 6.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 89 ரன் எடுத்து, 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. கோஹ்லி (2), சூர்யகுமார் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE