மதுரை : 'பல நலத் திட்டங்களுக்கு, அரசு பெரும் தொகையை செலவிடுகிறது. ஆனாலும், பிச்சைக்காரர்கள் அதிகரிக்கின்றனர்.'பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம் மற்றும் பிச்சை எடுப்பதைத் தடுக்கும் சட்டம் கடுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே தண்ணீர் தொட்டியின் கீழ் ஒரு கணவன், மனைவி மற்றும் 3 வயது குழந்தை துாங்கினர். குழந்தை மாயமானது. குழந்தையை பிச்சையெடுக்க வைக்கும் நோக்கத்திற்காக கடத்தியதாக, பாண்டியன் என்பவரை திருச்சி கோட்டை போலீசார் கைது செய்தனர்.அவர் ஜாமின் கோரி, உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தார்.
சட்டப்படி குற்றம்
நீதிபதி பி.புகழேந்தி உத்தரவு:பிச்சை எடுப்பதில் குழந்தையை ஈடுபடுத்தினால் அது சட்டப்படி குற்றம். தண்டனை விதிக்க வழிவகை உள்ளது. பிச்சை எடுத்தல் என்பது, தமிழ்நாடு பிச்சை எடுத்தல் தடுப்புச் சட்டப்படி குற்றம். ஆயினும், அது குறையவில்லை.ஏராளமானோர் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், தங்கள் செயல்களுக்கு கேடயமாக, குழந்தைகளை பயன்படுத்துகின்றனர். சிக்னல்கள், கோவில்கள், பஸ் ஸ்டாண்ட்கள், ரயில்களில் பிச்சை எடுக்கின்றனர். செங்கல்பட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்கள், பல தலைமுறைகளாக பிச்சை எடுக்கின்றனர்.சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின்னும், வறுமையை நாம் முற்றிலுமாக ஒழிக்கவில்லை. 'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார் மகாகவி பாரதி. இந்த நோக்கத்துடன், பல்வேறு நலத் திட்டங்களுக்கு அரசு பெரும் தொகையை செலவிடுகிறது.
ஏழைகள், முன்னுரிமை பிரிவினருக்கு மாதந்தோறும் ரேஷன் கடைகளில் அரிசி வழங்கப்படுகிறது. மத்திய - மாநில அரசுகளால், பல சமூக பாதுகாப்புத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. முதியோர், ஆதரவற்ற விதவை, மாற்றுத் திறனாளிகளுக்கு 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 256 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது.
நியாயமான வருமானம்
அவர்கள், நியாயமான வருமானத்தைக் கொண்டு கவுரவமாக வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களை செயல்படுத்தியும் சூழ்நிலை மாறவில்லை. நாளுக்கு நாள், மாநிலத்தில் பிச்சைக்காரர்கள் அதிகரிக்கின்றனர்.மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதல்வராக இருந்தபோது, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டத்தை துவங்கினார். பிச்சை எடுப்பதை ஒழிப்பதற்காக, ஆறு சிறப்பு இல்லங்கள் நிறுவப்பட்டன.
அவை, தற்போது பாழடைந்த நிலையில் உள்ளன. பயன்பாட்டில் இல்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.பிச்சைக்காரர்களுக்குரிய இல்லங்களில் யாரும் இல்லை. எனினும், அந்த இல்லங்களின் பராமரிப்பாளர்களுக்காக மாதந்தோறும் பொதுப் பணம் 1.50 லட்சத்தை அரசு செலவிடுகிறது.பிச்சை எடுத்தல்தடுப்புச் சட்டப்படி, மேல்பாக்கத்தில் அரசு பராமரிப்பு முகாமை 1954ல் துவக்கியது. இது, பிச்சைக்காரர்களுக்காக அரசால் நடத்தப்படும் ஒரே ஒரு இல்லம்.
பிச்சை எடுக்கும் குற்றத்தைத் தடுக்க, பிச்சைக்காரர்களின் திறமைகளை மேம்படுத்தி, தொழில் கற்றுக் கொடுத்து, பயனுள்ள குடிமக்களாக மாற்ற, மறுவாழ்வு அளிக்கும் நோக்கில் இது துவக்கப்பட்டது. தற்போது அது முற்றிலும் பாழடைந்து, பிச்சைக்காரர்கள் தங்குவதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது.பிச்சை எடுத்தல் ஒரு குற்றமாகக் கருதப்பட்டு, 1945ல் இயற்றப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
போதுமான உணவு
மக்களுக்கு போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய, அரசு பல திட்டங்களின் கீழ் பொது நிதியை அதிகம் செலவழிக்கிறது. ஆனால், உண்மை என்னவெனில், தற்போதும்கூட பலர் தெருக்களில் அலைந்து திரிந்து, குழந்தைகளைப் பயன்படுத்தி பிச்சை எடுக்கின்றனர்.
வாழ்க்கை உரிமை மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கு அரசியலமைப்பு சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது. மாநிலத்தில், மக்கள் அனைவரும் கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்வது, அரசின் கடமை.
தலைமைச் செயலர்
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம் மற்றும் பிச்சை எடுப்பதைத் தடுக்கும் சட்டம் கடுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதில் கவனம் செலுத்தும் வகையில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அல்லது சமூக நலத்துறைக்கு அப்பணியை ஒதுக்க வேண்டும். இதை, தமிழக தலைமைச் செயலரின் கவனத்திற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் கொண்டு செல்ல வேண்டும்.இவ்வழக்கில் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால், மனுதாரர் சட்டப்பூர்வ ஜாமின் பெற உரிமை பெறுகிறார். மறு உத்தரவு வரும் வரை போலீசில் தினமும் ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE